`சீட் பெல்ட் மாட்டுங்க ப்ளீஸ்; விதிகளைப் பின்பற்றினால் மரக்கன்று’- விறுவிறு விருதுநகர் காவல்துறை | Virudhunagar Police Road Safety Awareness

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (07/02/2019)

கடைசி தொடர்பு:19:15 (07/02/2019)

`சீட் பெல்ட் மாட்டுங்க ப்ளீஸ்; விதிகளைப் பின்பற்றினால் மரக்கன்று’- விறுவிறு விருதுநகர் காவல்துறை

மரக்கன்று

சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி விருதுநகரில் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்குக் காவல்துறையினர் மரக்கன்று கொடுத்து ஊக்கமளித்தனர்.

 

காவல்துறை

நாளுக்கு நாள் வாகன உற்பத்தியும், அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் வாகன விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலும், சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிப்ரவரி 4 முதல் 10-ம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 4-ம் நாளான இன்று விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கலை கல்லூரி அருகே காவல்துறையினர் விழிப்பு உணர்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டுவது குறித்தும் விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் விளக்கமளித்தனர். மேலும் வாகனங்களின் கண்ணாடியில் சீட் பெல்ட் மாட்டுங்க ப்ளீஸ் என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டினர்.

மரக்கன்று

பெல்ட் அணிந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வேம்பு, தேக்கு, சீத்தாப்பழம், புங்கை போன்ற மரக்கன்றுகள் கொடுத்து காவல்துறையினர் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினர். இது வாகன ஓட்டிகளை மட்டுமன்றி அந்த வழியாகச் சென்ற பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.