தமிழகத்தில் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு என்ன? இதுவரை பி.ஜே.பி. கூட்டணி கடந்த பாதை...! #VikatanInfographics | History of BJP alliance in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (08/02/2019)

கடைசி தொடர்பு:08:40 (08/02/2019)

தமிழகத்தில் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு என்ன? இதுவரை பி.ஜே.பி. கூட்டணி கடந்த பாதை...! #VikatanInfographics

`ஜெயலலிதாவைப் பின்பற்றி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும். வெற்றியோ தோல்வியோ நாம் அவர் பாணியையே பின்பற்ற வேண்டும்'

தமிழகத்தில் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு என்ன? இதுவரை பி.ஜே.பி. கூட்டணி  கடந்த பாதை...! #VikatanInfographics

மிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... மலர்ந்தே தீரும் என்று ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் தவறாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார் பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டா எண்ணிக்கையை விடக் குறைவான வாக்குகள் கிடைத்ததுதான் மிச்சம். இந்தச் சூழலில்தான், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பி.ஜே.பி. இடம்பெறுவது உறுதி என்ற பேச்சுகள் பரவலாக அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன. 

இந்த நிலையில், 1996 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி இதுவரை, தமிழகத்தில் பி.ஜே.பி.-யின் கூட்டணி குறித்த ஒரு பார்வை...

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய தமிழக முதல்வரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் அ.தி.மு.க-வை வெற்றிபெறச் செய்து, நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

`ஜெயலலிதாவைப் பின்பற்றி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும். வெற்றியோ தோல்வியோ நாம் அவர் பாணியையே பின்பற்ற வேண்டும்' என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறி வந்தாலும், அது சாத்தியமில்லை என்பது நிதர்சனமான உண்மை.

பி.ஜே.பி. - அதிமுக கூட்டணி

``தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை பரம ரகசியம். பேச்சுவார்த்தை முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது கூட்டணி பற்றி நிச்சயம் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி" என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ``கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் முடிவு  செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சரும், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவருமான பொன் ராதாகிருஷ்ணன், ``பி.ஜே.பி. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், பி.ஜே.பி. அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றிபெறும்" என்று கூறுகிறார். இந்தக் கூற்றுகள் அனைத்தையும் பொருத்திப் பார்த்தால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பி.ஜே.பி. இடம்பெறுவது உறுதி என்றே தெரிகிறது. 

இதற்கு முந்தைய தேர்தல்களில், தமிழகத்தில் பி.ஜே.பி. எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது என்பதைப் பார்க்கலாம்.

1998 நாடாளுமன்றத் தேர்தல்: 

இந்தத் தேர்தலில்தான், முதல்முறையாக திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்தது பி.ஜே.பி. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த பி.ஜே.பி. தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் பெற்றிபெற்றது. கூட்டணியைப் பொறுத்தவரை, மொத்தம் 30 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனினும் இந்தக் கூட்டணி ஓராண்டுகூட நீடிக்கவில்லை. பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இருந்த அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் ஜெயலலிதா. பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.

பி.ஜே.பி.  - அதிமுக கூட்டணி

1999 நாடாளுமன்றத் தேர்தல்: 

அ.தி.மு.க. வெளியேறியதும், பி.ஜே.பி.-யை தமிழகத்தில் தி.மு.க. அரவணைத்துக் கொண்டது. தி.மு.க. தலைமையில் உருவான கூட்டணி, இந்தத் தேர்தலில் 26 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி, நான்கில் வெற்றிபெற்றது. 2004 மக்களவைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி முறிந்தது.

2004 நாடாளுமன்றத் தேர்தல்: 

மீண்டும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பி.ஜே.பி. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸை உள்ளடக்கிய தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணி தமிழகத்தில் தோல்வியைச் சந்தித்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தல்: 

2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தனித்துப் போட்டியிட்டது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பி.ஜே.பி. வெற்றிபெற முடியவில்லை. வாக்கு சதவிகிதமும் மிகவும் குறைவாகப் பதிவானது. 

2014 நாடாளுமன்றத் தேர்தல்: 

இந்தத் தேர்தலில் பி.ஜே.பி, தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணியை ஏற்படுத்தியது. பி.ஜே.பி-யுடன் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இந்த மெகா கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஏழு இடங்களில் போட்டியிட்ட பி.ஜே.பி. கன்னியாகுமரியில் மட்டுமே வெற்றிபெற்றது.

தமிழகத்தில் பி.ஜே.பி. கூட்டணி

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. தற்போது பல அணிகளாகப் பிரிந்து செயல்படும் நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறது என்பதை அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, தமிழக மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இந்தத் தேர்தல் அக்கட்சிக்கு மிகப்பெரும் சவாலானதாகவே இருக்கும். 

தமிழகத்தில் `தாமரை மலர்ந்தே தீரும்' என்ற கூற்று பலிக்குமா? அல்லது மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஆகுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்