தலைமையாசிரியர் மாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம் - தேனீக்கள் படையெடுத்ததால் பரபரப்பு | Bee attacks parents in govt school

வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (07/02/2019)

கடைசி தொடர்பு:22:50 (07/02/2019)

தலைமையாசிரியர் மாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம் - தேனீக்கள் படையெடுத்ததால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் தேனிக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தேனீ

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து  அறிஞர் அண்ணா மேல் நிலைப்பள்ளிக்கு முறையிட வந்த பெற்றோர்களை தேனிக்கள் கொட்டியதில் பெற்றோர் பலர் காயமடைந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக குன்னூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வெவ்வேறு பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள ஜெ.கொலகம்பை நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மாற்றப்பட்டதை கண்டனம் தெரிவித்து, பள்ளி முன் அமர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும்  மீண்டும் அதே தலைமையாசிரியரை பள்ளியில் பணியமர்த்த வேண்டுமென்றும் பெற்றோர்களும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் நேற்று குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள கல்வி அலுவலகம் முன்பு பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்தப் பகுதியிலிருந்து தேனிக்கள் திடீரெனப் பெற்றோர்களை கொட்டத் தொடங்கியது. அதைக்கண்டு அஞ்சிய பெற்றோர் மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். தேனிக்கள் கொட்டியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களை குன்னூர் அரசு மருத்து மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  குழந்தை கல்விக்காக முறையிட வந்த பெற்றோர்களை தேனிக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க