கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்த துப்புரவுத் தொழிலாளி உயிரிழப்பு! | Worker died while cleaning septic tank near Aruppukottai

வெளியிடப்பட்ட நேரம்: 23:10 (07/02/2019)

கடைசி தொடர்பு:23:10 (07/02/2019)

கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்த துப்புரவுத் தொழிலாளி உயிரிழப்பு!

அருப்புக்கோட்டை அருகே வீட்டின் செப்டிக் டேங்கைச் சுத்தம் செய்தபோது உள்ளே விழுந்த சக தொழிலாளியைக் காப்பாற்ற முயன்ற துப்புரவுத் தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொழிலாளி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தூயமணி என்பவரது மகன் சபரிநாதன் (31). இவர் அருப்புக்கோட்டையில் தங்கியிருந்து வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள பூலாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காதர்பாட்சா என்பவரது வீட்டில் இருந்த செப்டிக் டேங்க் நிரம்பியதால் அதை அகற்றுவதற்காக சபரிநாதனை அழைத்துள்ளார். அதன்படி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இராஜபாண்டி மற்றும் திருச்சுழியைச் சேர்ந்த ராமர் ஆகியோரை அழைத்துக் கொண்டு டேங்கர் லாரியுடன் பூலாங்கல் கிராமத்துக்குச் சென்ற சபரிநாதன் செப்டிக் டேங்கில் இருந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த செப்டிக் டேங்கில் அடைப்பு இருந்ததால் அதன் மூடியை இராஜபாண்டி திறந்து பார்த்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்த இராஜபாண்டி சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தார். அதைக் கண்ட சபரிநாதன் உள்ளே இறங்கி இராஜபாண்டியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இராஜபாண்டியை வெளியே ஏற்றிவிட்ட சபரிநாதன் விஷவாயு தாக்கி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சபரிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மயக்கமடைந்த இராஜபாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பரளச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆங்காங்கே உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் இந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் துப்புரவு தொழிலாளர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.