`வலிமையான கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறோம்!’ - அமைச்சர் செங்கோட்டையன் | senkottaiyan spoke about 2019 Election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:23:30 (07/02/2019)

`வலிமையான கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறோம்!’ - அமைச்சர் செங்கோட்டையன்

'தமிழகத்தில், வலிமையான கூட்டணியை அ.தி.மு.க அமைத்துக்கொண்டிருக்கிறது' என காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

அப்போது கட்சியினரிடையே பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “எதிர்க்கட்சி என்பது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இன்று ஊர் ஊராக ஊராட்சிக் கூட்டங்கள் போட்டு கேலிப் பேச்சு பேசிவருவது வேடிக்கையாக இருக்கிறது. ஓடி ஓடி பணிசெய்யவேண்டிய காலத்தில், உட்கார்ந்து எப்படி பணிசெய்ய முடியும் என நாங்கள் கேட்கிறோம். மக்கள் பணிகள் நிறைய இருக்கின்றன. அதை ஆற்றவேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. அதைச் சிறப்பாக நாங்கள் செய்துவருகிறோம்.

பாலாற்றிலே இரண்டு இடங்களில் அணைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம். ஆனால், தி.மு.க ஆட்சியில் அதற்கான எந்தத் திட்டமும் இதுவரை தீட்டப்படிவில்லை. பாலாற்றிலிருந்து வரும் தண்ணீரைத் தடுப்பதற்கு ஆந்திராவுக்கு உதவிசெய்தவர்கள் தி.மு.க-வினர். முல்லைப் பெரியாறு தண்ணீருக்காக அவர்கள் போராடவில்லை. ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தமிழக மக்களுக்குத் தேவையான பணியைச் செய்யாதவர்கள் தி.மு.க-வினர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றியடையும். தொகுதியில் இருக்கும் சிலரிடம் மட்டுமே பெற்று வெளியாகும் கருத்துக்கணிப்புகளை பல முறை நாம் வீழ்த்திக்காட்டியிருக்கிறோம். தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் அளவில், தமிழகத்தில் தேர்தல் தீர்ப்புகள் கிடைக்கும். அதற்கான வலிமையான கூட்டணி அமைந்துகொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணியை தமிழகத்தில் எந்த சக்தியாலும் வெல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க