கன்னியாகுமரிக்கு வந்த 175 ஆண்டுகள் பழைமையான நீராவி ரயில் என்ஜின்! - பயணிகள் மகிழ்ச்சி | 175 years old steam train engine runs in Kanniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:00:00 (08/02/2019)

கன்னியாகுமரிக்கு வந்த 175 ஆண்டுகள் பழைமையான நீராவி ரயில் என்ஜின்! - பயணிகள் மகிழ்ச்சி

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி சென்ற நீராவி இன்ஜின் ரயிலில் 20 வெளிநாட்டுப் பயணிகள் கன்னியாகுமரி வரை பயணித்தனர்.

நீராவி ரயில்


163 ஆண்டுகள் பழைமையான நீராவி இன்ஜின் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து இன்று இயக்கப்பட்டது. நாகர்கோவிலிலிருந்து 20 வெளிநாட்டுப் பயணிகளுடன் இன்று மாலை புறப்பட்ட நீராவி இன்ஜின் முன்பு பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் பயணித்த வெளிநாட்டவர்கள் ரயில் இன்ஜின் குறித்து ஆய்வு செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் சிரீஸ்குமார் சின்கா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நீராவி ரயில்

மணிக்கு சுமார் 40 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் கன்னியாகுமரியைச் சென்றடைய 45 நிமிடம் ஆகும். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவிலுக்கு டீசல் ரயில் இன்ஜின் மூலம் கொண்டுவரப்பட்டுப் பின்னர் மீண்டும் கன்னியாகுமரிக்கு இயக்கப்படுகிறது. ஒரு நாள் ஒருமுறை மட்டும் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிக்க வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் புக் செய்துள்ளனர்.

நீராவி ரயில்

வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரூ.1500, இந்தியர்களுக்கு ரூ.500 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருவனந்தபுரம் டிவிஷனில் முதல் முறையாக நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து இந்த ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

நீராவி ரயில்

மொத்தம் 40 பயணிகள் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட ஏ.சி. கோச்சில் இன்று முதன் முறையாக வெளிநாட்டுப் பயணிகள் 20 பேர் பயணித்தனர். அடுத்ததாக எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. பின்னர், பாலக்காடு டிவிஷனில் இயக்கப்படுகிறது" என்றார்.