கும்பகோணம் பா.ம.க பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது! | Police arrests 5 over kumbakonam PMK cadre murder case

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (07/02/2019)

கடைசி தொடர்பு:12:55 (09/02/2019)

கும்பகோணம் பா.ம.க பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது!

திருபுவனம் அருகே ஒரு பிரிவினர் மதமாற்றம் செய்யும் செயலில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக் கேட்ட பா.ம.க பிரமுகர் அன்று இரவே கொலை செய்யப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்ததோடு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை நீதிபதி வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ராமலிங்கம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.கவின் திருபுவனம் பகுதியின் முன்னாள் நகரச் செயலாளராக இருந்தார். சமையல் கேட்டரிங் மற்றும் சாமியானா பந்தல், சமையல் பாத்திரங்கள் வாடகை கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சித்ரா மனைவி, ஷாம்சுந்தர், மலர் மன்னன், இளவரசன் என மூன்று மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 5ம் தேதி வேலைக்கு ஆட்களை அழைப்பதற்காக ஆதிதிராவிடர் பகுதிக்குச் சென்றார்.

கைது செய்யப்பட்டவர்

அப்போது அந்தப் பகுதியில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிலர் மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. உடனே, அவர்களிடம் ராமலிங்கம், `நீங்கள் ஏன் மதம் மாறச் சொல்கிறீர்கள் நாங்கள் அது போல் செய்கிறோமா?’ எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு வித சலசலப்பு ஏற்பட்ட பின்னர் இருதரப்பும் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர்.

கைது செய்யப்பட்டவர்

இதைத் தொடர்ந்து அன்று இரவு 11.30 மணிக்கு தனது மகன் ஷாம்சுந்தரை அழைத்துக்கொண்டு ராமலிங்கம் லோடு ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் அவரை வழி மறித்த 4 பேர் கொண்ட கும்பல், ராமலிங்கத்தின் கைகளை அரிவாளால் வெட்டியது. பின்னர், அவரது மகன் ஷாம்சுந்தரையும் வெட்ட முயன்றபோது ராமலிங்கம் அதைத் தடுத்துள்ளார் அப்போது மற்றொரு கையையும் வெட்டியுள்ளனர். இதில் இரண்டு கையிலும் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராமலிங்கம் கீழே சரிந்தார்.

கைது செய்யப்பட்டவர்

பிறகு அப்பகுதியினர் ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனையடுத்து நேற்று திருபுவனம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்படும் என்பதால், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி,லோகநாதன், தஞ்சாவூர், அரியலுார், திருவாரூர் மாவட்டங்களின் எஸ்.பிக்கள், மூன்று ஏ.டி.எஸ்.பிக்கள், 10 டி.எஸ்.பிக்கள்., 15 இன்ஸ்பெக்டர் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனப் பலர் குரல் கொடுத்தனர். இந்தநிலையில் ராமலிங்கம் மகன் ஷாம்சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் 5 நபர்களிடம் தொடர் விசாரணை நடத்திய பிறகு இன்று திருவிடைமருதுார் பகுதியைச் சேர்ந்த அஸாருதீன்,குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ்,திருபுவனம் பகுதியைச் சேர்ந்த சர்புத்தீன்,முகம்மது ரிஸ்வான், நிஜாம் அலி ஆகியோரை கைது செய்தனர். மேலும், சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கும்பகோணம் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜீ முன் அவர்கள் ஆஜர்படுத்தினர். அவர் வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க