`21 லட்சம்; 55 வீடுகள்' - கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுத்த பள்ளி மாணவர்கள்! | school students helps build a new houses for people who are affected in gaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:27 (08/02/2019)

`21 லட்சம்; 55 வீடுகள்' - கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுத்த பள்ளி மாணவர்கள்!

அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர். வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை கூறி இதை மறந்து விடாமல் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து மகிழ்ந்திருப்போம் எனக் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சேலத்தில் உள்ளது எமரல்ட் வேலி பப்ளிக் பள்ளி. இந்தப் பள்ளி நிர்வாகம் கஜா புயலில் பாதித்தவர்களுக்கு தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என நினைத்து அதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அறிந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஏராளமாக கிடைக்கிறது எனத் தெரிந்தது. அதனால் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் உதவியை செய்து தர வேண்டும் என நினைத்தனர். இது குறித்து அந்தப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் நம் பள்ளி சார்பில் கஜா புயலில் பாதித்தவர்களுக்கு உதவ இருக்கிறோம். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்யலாம் என அறிவித்தார் பள்ளியின் தாளாளர் மீனா சேது.

கஜா புயலின் தாக்கத்தை நன்கு அறிந்திருந்த மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறி உதவுவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் எனக் கூறினர். பல மாணவர்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த காசை உண்டியலோடு எடுத்து வந்து பள்ளியிலேயே எடுத்துக் கொடுத்தனர். அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் தங்களால் முடிந்த பண உதவியைச் செய்தனர். நூறு ரூபாய் தொடங்கி 1 லட்சம் வரை கஜா புயலுக்கு உதவுவதற்காக பணத்தைக் கொடுத்தனர். மேலும், ஆசிரியர்களும் குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ள கூறினர். இப்படி மொத்தம் ரூ.16 லட்சம் வரை சேர்ந்தது. அதோடும் எமரல்ட் வேலி பள்ளி நிர்வாகம் ரூ.5 லட்சம் கொடுத்தது. மொத்தம் 21 லட்சத்துடன் களமிறங்கியவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி பட்டுக்கோட்டை சுற்றி முற்றிலும் சேதமடைந்த மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தது. மொத்தம் 9 கிராமங்களைப் பார்த்துவிட்டு இதில் அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் மேட்டுத்தெரு, நாடியம்பாள்புரம் பகுதிகளை தேர்ந்தெடுத்தனர். இங்கு மொத்தம் 21 லட்சத்தில் 55 வீடுகள் கட்டப்பட்டன. அவற்றை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் விழா போல எடுத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். வீட்டைப் பெற்றுக் கொண்ட மகேஸ்வரியின் மகள் ரம்யா என்பவர், ``புயலின் கோரத் தாண்டவத்தால் ஒரே நாளில் வீடு, உடமை என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நின்றோம். பிழைப்புக்கு போறதுக்கும் வழியில்லாமல் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு கோயில் மற்றும் முகாம்களில் வசித்தோம். 

எல்லாவற்றையும் இழந்த பிறகு இனி என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் அப்பா ரொம்பவே கவலைபட்டார். கம்பு கூட வாங்க முடியாமல் இருக்கிறோம் நம்மால் எப்படி வீடு கட்ட முடியும். வயதுக்கு வந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என அம்மா கலங்கினார். இந்த நேரத்தில் எங்களின் கண்ணீரை துடைக்க வந்தார்கள் எமரல்ட் வேலி பள்ளி நிர்வாகத்தினர். அவர்கள் நாங்கள் உங்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என சொன்னதும் தான் எங்கள் முகத்தில் கொஞ்சம் புன்னகை பரவ ஆரம்பித்தது. இதே நிலைமையில் தான் எங்க பகுதியைச் சேர்ந்த அனைவரும் இருந்தனர். பள்ளி நிர்வாகம் சொன்னது போலவே வீடுகளை கட்டிக் கொடுத்து எங்களிடம் ஒப்படைத்து விட்டனர். அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறி மறந்து விடாமல் வாழ் நாளுக்கும் நினைவில் வைத்திருப்போம்" என்றார்.

பள்ளியின் தாளாளர் மீனா சேதுவிடம் பேசினோம், ``பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க நினைத்தோம். அது குறிப்பிட்ட காலத்துக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும் என நினைத்தோம். இதற்காக என் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த நிதிதான் இன்று இந்த ஏழைகளின் வீடாக மாறி நிற்கிறது. நான் எல்லோராலும் முடிந்ததைக் கொடுங்க என சொன்னதும் ஒரு மாணவி நான் நூறு ரூபாய் சேர்த்திருக்கேன் மேடம் கொண்டு வந்து தாரேன் வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டி கொடுங்க என முதல் ஆளா கொண்டு வந்து கொடுத்தாள். அது பின்னர் 21 லட்சமாக மாறியது. 16-க்கு 11 அளவில் நான்கு பக்கமும் மூன்று அடியில் ஹாலோபிளாக் கல் வைத்து சுவர் எழுப்பி, சுற்றிலும் 6 கான்கிரீட் கல்லால் ஆன போஸ்ட் வைத்து, வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் 12 அடி உயரம் கொண்ட போஸ்ட் வைத்து மேற்கூரை அமைப்பதற்கு சவுக்கு கம்புகளால் சாரம் கட்டி தென்னங்கீற்றால் கூரை அமைத்தோம்.

தரையில் கான்கிரீட் தளமும் போட்டோம். பார்ப்பதற்கு அழகாகவும் ஏழைகளுக்கு மகிழ்சியை தரப் போகும் இடமாகவும் உள்ளது இந்த வீடுகள். இந்தப் பணி நடந்து கொண்டிருக்கும்போது எங்க மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பணத்தைக் கொடுத்து விட்டோம் பணி முடிந்து விட்டது என நினைக்காமல் சேலத்தில் இருந்து வந்து தங்கியிருந்து வீடு கட்டும் பணியைச் செய்து முடித்தனர். வீடுகளை ஒப்படைக்கும்போது எங்கள் மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு முன்னிலையிலேயே கொடுத்தோம். முடிந்ததைச் செய்து 55 குடும்பங்களுக்கு விளக்கேற்ற காரணமாக இருந்த எங்கள் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களை நினைத்து நான் பெருமை கொண்டு மனதில் பெரு மகிழ்வு  அடைந்தேன். இதேபோல் வீட்டை பெற்றுக்கொண்டவர்களிடம் நன்றாக சம்பாதித்து அதில் ஒரு பாதியைச் சேர்த்து வைத்து சில வருடங்களில் இந்த வீட்டை மாடி வீடாக மாற்ற வேண்டும் என்றேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் சரி என புன்னகைத்தனர். இதற்கு இதே பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர் பெரும் உதவி செய்தார். அவராலும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது இந்தக் குடும்பங்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க