`காட்பாடியில் தந்தை-மகன் எரித்துக் கொலை!’ - ராணுவ வீரர், கார் ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை | 'Father-son burning catcher in katpadi!' -The military man, car driver double life

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:51 (08/02/2019)

`காட்பாடியில் தந்தை-மகன் எரித்துக் கொலை!’ - ராணுவ வீரர், கார் ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

காட்பாடியில் தந்தை-மகனை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில், ராணுவ வீரர் மற்றும் கார் ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறை

வேலூர் அடுத்த காட்பாடி சின்னகேசகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (27), ராணுவ வீரரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு இமாசல பிரதேசத்தில் வேலை பார்த்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த பீம்சிங் (50) என்பவர் அறிமுகமானார். பீம்சிங்கின் மகன் மனோஜ்சிங் (24) ராணுவத்தில் சேர முயற்சி செய்வதையறிந்த மகேந்திரன், ``பணம் கொடுத்தால் ராணுவத்தில் உடனே வேலை வாங்கித் தருகிறேன்’’ என்று கூறியுள்ளார். பீம்சிங்கும், ஒரு லட்சத்து 36,000 ரூபாயை மகேந்திரனுக்குக் கொடுத்துள்ளார். பணம் பெற்ற அவர், வேலை வாங்கித் தரவில்லை. பீம்சிங், பணத்தை திரும்பக் கேட்டார்.

விடுமுறையில், காட்பாடிக்கு வந்த மகேந்திரன், பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி 13.10.2014 அன்று பீம்சிங் மற்றும் அவரின் மகன் மனோஜ்சிங் ஆகிய இருவரையும் காட்பாடிக்கு வரவழைத்தார். தந்தை-மகனைக் கொலை செய்ய மகேந்திரன், தன்னுடைய ஊர்க்காரரான கார் ஓட்டுநர் காளிதாசனுடன் (26) சேர்ந்து திட்டம் போட்டார். அதன்படி, தந்தை-மகனை காட்பாடியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, கொடூரமாகத் தாக்கி விஷம் கலந்த மதுவைக் குடிக்க வைத்தனர். சுய நினைவை அவர்கள் இழந்தவுடன், இருவரையும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றனர்.

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, மேல்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் மகேந்திரன் மற்றும் கார் ஓட்டுநர் காளிதாசனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இவ்வழக்கில், வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. கொலை மற்றும் கடத்திச் சென்று எரித்த குற்றத்துக்காக, ராணுவ வீரர் மகேந்திரன் மற்றும் கார் ஓட்டுநர் காளிதாசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தடயங்கள் மற்றும் குற்றங்களை மறைத்த குற்றத்துக்காக கூடுதலாக மேலும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பில், ``தண்டனைக் காலங்களில் அரசின் சலுகை மற்றும் நன்னடத்தை அடிப்படையில் எக்காரணம் கொண்டும் இருவரையும் விடுதலை செய்யக் கூடாது. அவர்கள் கட்டாயம் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்’’ என்று நீதிபதி குணசேகர் உத்தரவிட்டார். இதையடுத்து, ராணுவ வீரர் மற்றும் கார் ஓட்டுநர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.