வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு? - ஐ.டி ரெய்டில் சிக்கிய டி.டி.வி தினகரன் ஆதரவாளர் | IT raid in TTV Dinakaran's supporter house in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:54 (08/02/2019)

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு? - ஐ.டி ரெய்டில் சிக்கிய டி.டி.வி தினகரன் ஆதரவாளர்

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளை சேர்த்ததோடு, அதைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, திருப்பத்தூரைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகியின் வீடு, நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஞானசேகரன்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், அ.தி.மு.க-வில் திருப்பத்தூர் நகரச் செயலாளராகவும், வேலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்ததாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவால் டி.டி.வி.தினகரன் விசுவாசியாக மாறினார். இதனால், தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில், வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருப்பத்தூரில், ஞானசேகரனுக்குச் சொந்தமாக பெட்ரோல் பங்க், வணிக வளாகங்கள் உள்ளன. ஏலகிரி மலையில் உள்ள தனக்கு சொந்தமான கட்டடத்தை ரெசார்ட்டுக்கும், திருப்பத்தூர் மெயின் ரோட்டில் உள்ள கட்டடத்தை பிரபல நகைக்கடைக்கும் வாடகைக்கு விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பத்தூரில் உள்ள காய்கறி சந்தையை மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்து இரண்டரை கோடிக்கு வாடகைக்கு எடுத்துள்ளது போன்ற பல்வேறு தொழில்களையும் ஞானசேகரன் செய்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞானசேகரன் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாகவும், அதைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துவருவதாகவும் வருமான வரித்துறைக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், திருப்பத்தூரில் உள்ள ஞானசேகரன் வீட்டில் 7-ம் தேதி அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். பெட்ரோல் பங்க், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது.

இந்த சோதனையில், ஞானசேகரன் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஞானசேகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.