`நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன்?' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி! | Madras hc questioned to tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:11:55 (08/02/2019)

`நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன்?' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், `நிரந்தர வளைவுகள் அமைப்பதால் மக்களுக்கு என்ன பயன்?' என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு கட்ட தடை விதிக்க கோரி வழக்குரைஞர் தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி எந்தவித நிகழ்ச்சியும் இல்லாமல் அரசு வளைவை திறந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் சாலைகள் குறித்த அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், எம்.ஜி.ஆர் வளைவு கட்டப்பட்டுள்ள காமராஜர் சாலை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

நூற்றாண்டு வளைவு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதியளிக்க மட்டுமே மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளதாகவும், இந்த வளைவு பாதசாரிகளுக்கு இடையூறாக கட்டப்பட்டிருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இதற்கு அனுமதி அளித்திருப்பதாகத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு ஏற்கெனவே வளைவுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் எம்.ஜி.ஆருக்கு வளைவு கட்டப்பட்டது எப்படி அரசியலாகும் என கேள்வி எழுப்பினர். மேலும், மக்களுக்குப் பயனளிக்கும் சாலை விழிப்பு உணர்வு பதாகைகள் தற்காலிகமாக வைக்கப்படுகின்றன, ஆனால் இதுபோன்ற நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.