பழைய செல்போனில் சரவணனின் சிம்கார்டு!- இன்ஜினீயரிங் மாணவர் கொலையில் சிசிடிவியால் சிக்கிய நண்பர்கள் | 3 accused arrested in vandaloor murder case

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (08/02/2019)

கடைசி தொடர்பு:11:44 (08/02/2019)

பழைய செல்போனில் சரவணனின் சிம்கார்டு!- இன்ஜினீயரிங் மாணவர் கொலையில் சிசிடிவியால் சிக்கிய நண்பர்கள்

வண்டலூர் அடுத்துள்ள கீரப்பாக்கம் கல்குவாரியில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் கிடந்தார். இந்தக் கொலை வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கல்குவாரியில் இன்ஜினீயரிங் மாணவர் கொலை

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாயமானதால் அவரின் பெற்றோர் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 23-ம் தேதி புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரியில் சரவணனின் உடல் மிதந்தது. சரவணனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. சரவணன் கொலை குறித்து காஞ்சிபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தீபன்சக்ரவர்த்தி, கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து பல கொலை செய்துவிட்டு சரவணன் உயிரோடு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அவர்கள் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட சரவணன்

இது குறித்து மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்புராஜ், “கடந்த 22-ம் தேதி காணாமல் போன சரவணன் 26-ம் தேதி கல்குவாரியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். கல்குவாரி அருகே அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுக் கிடந்தது. இந்த நிலையில் 26-ம் தேதி சரவணன் செல்போனிலிருந்து அவரின் நண்பர் தன்ராஜுக்கு 5,000 ரூபாய் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது சரவணனின் செல்போன் எண் வேறு தொலைபேசியிலும் புதுச்சேரியில் சிக்னலில் இயங்கியதையும் கண்டுபிடித்தோம். அந்தச் செல்போன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரி என்பவருடையது எனத் தெரியவந்தது. அரி தன்னுடைய செல்போனை சென்னை மூர் மார்க்கெட்டில் விற்றுள்ளார். பின்பு மூர் மார்க்கெட்டில் உள்ள கடையில் விசாரணை நடத்திய போது அந்த செல்போனை 3 பேர் 500 ரூபாய்க்கு வாங்கிச் சென்றது தெரியவந்தது.

பின்பு, அங்கு பதிந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அந்தக் காட்சிகளில் சரவணனின் நண்பன் தீபன்சக்ரவர்த்தி இருந்ததால் அவர் மீது சந்தேகம் வந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம். சரவணன், தீபன் சக்ரவர்த்தி, பார்த்திபன், ராஜேஷ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கீரப்பாக்கம் கல்குவாரியில் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தக் தகராறில் சரவணன் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்குவாரியில் அவரின் நண்பர்கள் தள்ளிவிட்டுள்ளார்கள். சரவணன் உயிரோடு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த 26-ம் தேதி மூர் மார்க்கெட்டில் பழைய செல்போன் ஒன்றை வாங்கி அதில் சரவணனின் சிம் கார்டைப் போட்டு தன்ராஜ் என்பவருக்கு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார்கள்” என்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க