`உண்மை என்ன தெரியுமா தமிழிசை?' - `நீட்' ஆய்வாளர் ராம் பிரகாஷ் | NEET Researcher addresses Tamilisai regarding the controversy

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (08/02/2019)

கடைசி தொடர்பு:15:14 (08/02/2019)

`உண்மை என்ன தெரியுமா தமிழிசை?' - `நீட்' ஆய்வாளர் ராம் பிரகாஷ்

சமீபத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `நீட்’ தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். நீட் தேர்வை அரசியலுக்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

ராம் பிரகாஷ்

நீட் தேர்வில் தமிழகம் முன்னிலை எனத் தமிழிசை சொன்னதன் அடிப்படை, சமீபத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ மேற்படிப்பு பட்டியலில் தமிழக மாணவர்கள் முன்னிலையில் இருந்தார்கள். அதை வைத்துத்தான் "இது தமிழகத்துக்கு பெருமை. ஆகவே அதைவைத்து அரசியல் செய்ய வேண்டாம்' எனச் சொல்லியிருந்தார். 

நீட் தேர்வுகுறித்து தொடர்ந்து ஆய்வுசெய்துவரும் ராம்பிரகாஷிடம் இதுபற்றி கேட்டபோது, "முதுநிலைத் தேர்வுல வெற்றிபெற்றவங்களை வெச்சு நீட் தேர்வுல தமிழகம் முன்னணியில இருக்குங்கிற முடிவுக்கு நாம வர முடியாது. இதுல தேர்வானவங்க எல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னாடி எம்.பி.பி.எஸ் முடிச்சவங்க. சொல்லப்போனா, இவங்க மருத்துவத்துக்கு தேர்வாகும்போது, இவங்களுக்கு நீட் தேர்வே கிடையாது. இதுல ஒரு உண்மை ஒளிஞ்சிருக்கு பாத்தீங்களா, பாஸ் ஆனவங்க எல்லோரும் முதுகலை மருத்துவர்கள்.

இவங்க யாருமே அப்போ நீட் எழுதாம மருத்துவர் ஆனவங்க. ஆக நீட் எழுதாமலேயே புத்திசாலியான மருத்துவர் ஆகலாம்தானே! இதனாலதான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு மருத்துவம் படிக்க வர்ற மாணவர்களுக்கு நீட் அவசியம் இல்லைனு சொல்றோம். இதுகுறித்து விரிவா பேச முடியும். நீட் குறித்து ஸ்டாலின் அரசியல் பேச வேணாம்னு சொல்ற தமிழிசையும், அதை வெச்சு அரசியல்தான் பண்றாங்க" என்றார்.