பா.ஜ.க-வில் இணைகிறாரா சசிகலா புஷ்பா? | admk mp sasikala pushpa decides to join bjp

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (08/02/2019)

கடைசி தொடர்பு:18:35 (08/02/2019)

பா.ஜ.க-வில் இணைகிறாரா சசிகலா புஷ்பா?

"எம்.பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா என்னை அடித்தார்" என்று மாநிலங்களவையிலேயே புயலைக் கிளப்பியவர் சசிகலா புஷ்பா. இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டு, கிளர்ச்சி எம்.பி-யாக வலம்வந்தார். 

சசிகலா புஷ்பா

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக விருப்பமனு வழங்கப்பட்டது. ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் விருப்பமனு வாங்க வந்த சசிகலா புஷ்பாவின் முதல் கணவர் லிங்கேஸ்வரன் தாக்கப்பட்டார். இதனிடையே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ராமசாமி என்பவரை டெல்லியில் மணம் முடித்தார் சசிகலா புஷ்பா. இப்படி தடாலடி சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்தவர், பி.ஜே.பி-யில் இணைய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

மோடியை மீண்டும் பிரதமராக்க, 'மோடி ஃபார் பி.எம்.' என்கிற பிரசார இயக்கம் செயல்படுகிறது. இந்த பிரசார இயக்கத்தின் தென் இந்திய இணை ஒருங்கிணைப்பாளராகவும், இந்து பொருளாதார மன்றத்தின் தேசிய ஆலோசகராகவும் சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி செயல்படுகிறார். இதுபோக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அங்கமான தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், அறிவுசார்ந்த அணியின் செயலாளர் பொறுப்புகளையும் வகித்துவருகிறார். 

ராமசாமி சசிக்லா புஷ்பா

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பின்னர், தன் கணவர் ராமசாமி மூலமாக பி.ஜே.பி தலைவர்களுடன் சசிகலா புஷ்பா நெருக்கம் பாராட்டுவதாகக் கூறப்படுகிறது. கணவரின் பி.ஜே.பி தொடர்பான செயல்பாடுகளை, டெல்லியிலுள்ள மூத்த பத்திரிகையாளர்களுக்கும், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்., பி.ஜே.பி-யில் உள்ள தனது நண்பர்களுக்கும் அவ்வப்போது அவர் வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி வருகிறாராம். 

ஏப்ரல் 2014ல் மாநிலங்களவை எம்.பி-யாக பொறுப்பேற்ற சசிகலா புஷ்பாவின் பதவிக் காலம், ஏப்ரல் 2020ல் முடிவடைகிறது. மாநிலங்களவை எம்.பி-யாக ஒருவர் பதவியேற்று, முதல் ஆறு மாதங்களுக்குள்  வேறொரு கட்சிக்குத் தாவினால், அவர்மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அவர் எம்.பி-யாக பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டதால், சட்டப்படி கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயலாம். பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வருடமே இருப்பதால், தடைச் சட்டம் பாய்ந்தாலும் பரவாயில்லை, பி.ஜே.பி-யில் இணைந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகலாம் என்று கருதுகிறாராம்.

இதுகுறித்து விளக்கமறிய சசிகலா புஷ்பா, ராமசாமி இருவரின் எண்களையும் தொடர்புகொண்டோம். இருவருமே நமது அழைப்பை ஏற்கவில்லை. பி.ஜே.பி மூலமாக மீண்டும் மாநிலங்களவையை அலங்கரிக்கத் துடிக்கும் சசிகலா புஷ்பாவின் கனவு நிறைவேறுமா. காலம் தான் பதில் சொல்லும்.