விலையோ அதிகம்! அலெக்சாண்டர் பாராகீட் வகை கிளிகளை விற்க முயன்றவர்கள் கைது! | Birds Theft Forest Department takes strict Action

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:19:00 (08/02/2019)

விலையோ அதிகம்! அலெக்சாண்டர் பாராகீட் வகை கிளிகளை விற்க முயன்றவர்கள் கைது!

மதுரையில் விலை உயர்ந்த அரியவகை கிளிகளை வீட்டில் வைத்து விற்பனை செய்ய முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிளியை விற்பனை செய்து கைது செய்யப்பட்டவர்கள்

மதுரையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 43 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மதுரையைச் சுற்றியுள்ள மலைகள், வனப்பகுதிகளில் பறவைகள் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறின. இவ்வாறு பறவைகளுக்கு எதிராகப் பல குற்றங்கள் நடந்துவரும் நிலையில் மதுரைக்கு ஆந்திராவில் இருந்த அலெக்சாண்டர் பாராகீட் என்ற வகை கிளி கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் மதுரை மாப்பாளையத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட கிளிகளை வீட்டில் வைத்து மறைமுகமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் முகமது முஸ்தபா, அப்துல் ரஹீம், என்ற இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அலெக்சாண்டர் பாராகீட்  கிளி

பின்னர் வனத்துறை வரவழைக்கப்பட்டு வீட்டில் வைத்திருந்த அலெக்சாண்டர் பாராகீட் வகை கிளிகளை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் மற்றும் வனத் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் 40,000 வரை அபராதம் விதிப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.