`24 மாசம் ஆகுது, இன்னும் நிலுவைத்தொகை தரல!' - சப் கலெக்டர் ஆபீஸில் விவசாயிகள் தர்ணா | Sugarcane Farmers protest in Virudhachalam

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (08/02/2019)

`24 மாசம் ஆகுது, இன்னும் நிலுவைத்தொகை தரல!' - சப் கலெக்டர் ஆபீஸில் விவசாயிகள் தர்ணா

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், கரும்பு விவசாயிகள் நிலுவைத்தொகையை வழங்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் சமரசத்தை அடுத்து, கலைந்துசென்றனர்.

விருதாச்சலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

விருத்தாசலம்  அருகிலுள்ள அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 100 கோடி வரை நிலுவைத் தொகை தரவேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரி,  கடந்த மாதம் விருத்தாசலம் பாலகரையில் விவசாயிகள் 7 நாள்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்,  எலிக்கறி தின்னும் போராட்டம், மண்டை ஓடு வைத்து போராட்டம் எனப் பல்வேறு  நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, விருத்தாசலம் சார் ஆட்சியர் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தை  நடத்தி, பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை ரூபாய் 100 கோடியை வாங்கித்தருகிறோம் என உறுதியளித்தனர்.

இதையடுத்து,  விவசாயிகள்  போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதைத் தொடர்ந்து, இன்று 8-ம் தேதி  விவசாயிகள்  தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  விருத்தாசலம்  சார் ஆட்சியர் அலுவலம் வந்தனர்.  அப்போது, சார் ஆட்சியர் பிரசாந்த் அலுவலகத்தில் இல்லை. இதனால் விவசாயிகள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் திங்கள்கிழமை 11-ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, விவசாயிகள் கலைந்துசென்றனர். பின்னர், தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் 
கூறுகையில், ``விருத்தாசலத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர், சப்-கலெக்டர் ஆகியோர் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை ரூபாய் 100 கோடியை பெற்றுத்தருகிறோம் என்று கூறினார்கள்.  ஆனால், விவசாயிகளை ஏமாற்றுவதற்காகவே அதிகாரிகள் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர்.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கேட்டால், கேட்டுச் சொல்கிறோம் என்கின்றனர். விவசாயிகள் கரும்பு வெட்டி அனுப்பி 24 மாதங்கள் ஆகிவிட்டன. அரசு அதிகாரிகள்  ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் வேலைசெய்வார்களா?  விவசாயிகளை அடிமைப்படுத்தாதீர்கள், விவசாயிகளை மோசடிசெய்யாதீர்கள். விவசாயிகள் பெயரில் ரூ.300 கோடி, ரூ.400 கோடி வங்கியில் விவசாயிகளை ஏமாற்றி கடன் வாங்கிவிட்டார்கள். விவசாயிகளுக்குத் தெரியாமல் கடன் வாங்கியுள்ளனர். அதனால்  வங்கி மேலாளர், சர்க்கரை ஆலை முதலாளிகள் மீதும் வழக்குத் தொடரவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. இதை வலியுறுத்தி, சென்னையில் காத்திருக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசு, விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை தர வேண்டும். இதை வலியுறுத்தி, மார்ச் மாத கடைசியில்  10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி, டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்று கூறினார்.