"நிர்மலா சீதாராமனின் பாராட்டுப் பத்திரம் தேவையில்லை!" - ரபேல் விவகாரத்தில் சீறிய என்.ராம் | hindu n ram attacks defence minister nirmala sitharaman

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (08/02/2019)

"நிர்மலா சீதாராமனின் பாராட்டுப் பத்திரம் தேவையில்லை!" - ரபேல் விவகாரத்தில் சீறிய என்.ராம்

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தேசிய அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று, பிப்ரவரி 8-ம் தேதி காலை வெளிவந்த இந்து நாளேட்டில், ரபேல் விமானங்கள் வாங்குவதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பிரதமர் அலுவலகம் தலையிடுவதாக பாதுகாப்புத்துறை செயலாளர் குறிப்பு அனுப்பியிருந்ததைப் பிரசுரித்து இருந்தனர். 

ரபேல்

உச்ச நீதிமன்றத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில், பிரான்ஸ் நாட்டோடு பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவைத் தவிர, இரண்டாவது நபர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அது தவறாகிவிடும் என்றும் கூறியிருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான பிரமாணப் பத்திரத்துக்கு முரணாக, பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசோடு தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக 'இந்து நாளேடு' குற்றம் சாட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "பத்திரிக்கை தர்மத்தை அந்த நாளேடு கடைபிடிக்கவில்லை. பேச்சுவார்த்தை எப்படிச் செல்கிறது என்றுதான் பிரதமர் அலுவலகம் மேற்பார்வையிட்டதே தவிர, எந்த இடத்திலும் குறிக்கிடவில்லை. பாதுகாப்புத்துறை செயலாளரின் குறிப்பை மட்டும் கத்தரித்து நாளேட்டில் வெளியிட்டுள்ளனர். செயலாளரின் குறிப்புக்குப் பதிலளித்து அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் குறிப்பு எழுதியிருந்ததை ஏன் பிரசுரிக்கவில்லை? மனோகர் பாரிக்கரிடமே விளக்கம் கேட்டிருக்கலாமே?" என்று சீறியிருந்தார். 

ரபேல் விமான கொள்முதல் பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதாக பாதுகாப்புத் துறை செயலாளர் அனுப்பியிருந்த குறிப்புக்கு, பிரதமர் அலுவலகம் மேற்பார்வை இடுவதாகவும், இதற்கு அதிகப்படியாக அதிர்ச்சிகொள்ளத் தேவையில்லை என்றும், பிரதமரின் தனிச் செயலாளரைத் தொடர்புகொண்டு பேசி முடிக்குமாறும், மனோகர் பாரிக்கர் பதில் குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தப் பதில் குறிப்பை ஏன் பிரசுரிக்கவில்லை என்று பி.ஜே.பி கொந்தளிக்கிறது.

நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இந்து பத்திரிக்கையின் தலைவர் என்.ராம், "நிர்மலா சீதாராமனிடம் இருந்து எந்தப் பாராட்டுச் சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. பி.ஜே.பி அரசு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. ரபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் சம்பந்தப்படவில்லை, பிறகு எதற்காக தவறான ஒரு விவகாரத்தை நியாயப்படுத்த இப்படிப் போராடுகிறார் என்று புரியவில்லை" என்று கூறியுள்ளார். 

ரபேல் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக, இந்து பத்திரிக்கை இன்று கொழுத்திப்போட்ட வெடி, டெல்லியில் பலத்த சத்தத்தை உருவாக்கியுள்ளது.