விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் | sewage tank kills one life

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/02/2019)

கடைசி தொடர்பு:21:40 (08/02/2019)

விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

அருப்புக்கோட்டை அருகே கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாமிநாதன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்தவர் சபரிநாதன் (31). இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 9 வயதுப் பெண் குழந்தை மற்றும் 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். சபரிநாதன் செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள பூலாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காதர்பாட்சா என்பவரது வீட்டில் நேற்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக சக தொழிலாளிகளுடன் அங்கே சென்றார். அப்போது உள்ளே இருந்த அடைப்பை நீக்குவதற்காக இராஜபாண்டி என்ற தொழிலாளி தொட்டியில் துளையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே விழுந்து மயக்கமடைந்தார். அவரைக் காப்பாற்ற சபரிநாதன் உள்ளே இறங்கினார்.

இராஜபாண்டியை வெளியே ஏற்றிவிட்ட சபரிநாதன் விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சபரிநாதனை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இராஜபாண்டியன் மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சபரிநாதன் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விஷவாயு தாக்கி உயிரிழந்த சபரிநாதன் குடும்பத்தினருக்கு 2013-ம் ஆண்டுச் சட்டத்தின் படி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

மேலும் அவரது உறவினர்கள் மற்றும் வனவேங்கைகள் அமைப்பினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக சபரிநாதன் மனைவி கஸ்தூரி கூறும்போது, கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது உள்ளே விழுந்த என் கணவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். ஆனால் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய வைத்தவர் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த நபர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை நடத்த எனக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். என் கணவரை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் வேலையில் அமர்த்திய நபரிடம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.