பியூஷ் கோயலைச் சந்தித்த ஜெய் ஆனந்த் - திவாகரனின் அடுத்த மூவ் | Dhivakaran Political Move - Son Jai Anand met Piyush Goyal

வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (08/02/2019)

கடைசி தொடர்பு:20:11 (08/02/2019)

பியூஷ் கோயலைச் சந்தித்த ஜெய் ஆனந்த் - திவாகரனின் அடுத்த மூவ்

ஜெய் ஆனந்த்


நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். அதற்கான பணிகளில் கட்சியினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து பேசியுள்ளார் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்த். இவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஆவார்.

அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோது டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் இணைந்துதான் செயல்பட்டு வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதையடுத்து ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர். இதனையடுத்து `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் திவாகரன். மன்னார்குடியில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இதன்பின் டிடிவி தினகரனைக் கடுமையாக விமர்சித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் `தினகரன் ஒரு விஷக்கிருமி’ எனப் பேசினார்.

திவாகரன்


ஜனவரி மாதத்தில் திவாகரன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் பா.ஜ.க - அ.தி.மு.கவுக்கு இணைப்புப் பாலமாக இவர் செயல்பட்டு வந்ததாக ஒரு தகவல் வந்தது. இந்நிலையில் திவாகரனின் மகனும் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான ஜெய் ஆனந்த் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். தமிழக அரசியல் சூழல் குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இடம்பெறவுள்ளது.

திவாகரன் தனது செல்வாக்கைகாட்ட பிப்ரவரி 24-ம் தேதி மன்னார்குடியில் பிரமாண்டப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பியூஷ் கோயலுடனான இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரசியலில் திவாகரனும் தனக்கான காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். `அண்ணா திராவிடர் கழகத்தை’ அ.தி.மு.கவுடன் இணைத்து பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கப்போகிறாரா அல்லது பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலைச் சந்திப்பாரா என்ற கேள்விகளுக்கு மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் விடை கிடைக்கும் என நம்பலாம்.