``தினமும் கூடுதலாக 50 கி.மீ. இயக்க வேண்டும்” - போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்! | Kanchipuram Bus Drivers struggle against Management

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (09/02/2019)

கடைசி தொடர்பு:02:15 (09/02/2019)

``தினமும் கூடுதலாக 50 கி.மீ. இயக்க வேண்டும்” - போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்!

காஞ்சிபுரம் பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்குத் தினமும் 50 கி.மீ தொலைவு கூடுதலாக இயக்க வேண்டும் என்ற உத்தரவால் போக்குவரத்துப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பணிமனை முன்பு  இன்று காலை  அனைத்து போக்குவரத்து சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பேருந்துகள் இயக்கப்படாததால் பெறும் அவதிக்குள்ளாகினர். தினமும் 50 கி.மீ தொலைவு கூடுதலாக இயக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களிடம் போக்குவரத்து நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள், ``தினமும் 16 மணி நேரம் பணி செய்து 550 கிலோமீட்டர் தூரம் பேருந்துகளை இயக்கி வருகிறோம். இந்த நிலையில் தற்போது திடீரென 50 கி.மீ. தூரம் கூடுதலாகச் சேர்த்து 600 கி.மீ தொலைவு இயக்க வேண்டும் எனத் தொழிலாளர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்தியது. கூடுதல் பணிச்சுமையால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைக் கண்டித்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தோம். எங்கள் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றதால் போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறோம். இதை எழுத்துபூர்வமாக அறிவிப்பாக வெளியிட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறோம்.” என்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க