வீடு பால்காய்ச்சுக்கு அழைக்கப்பட்ட யானைக்கு மதம் பிடித்தது - ஒருவர் பலி! | Ramachandran elephant kills one person in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (09/02/2019)

கடைசி தொடர்பு:04:00 (09/02/2019)

வீடு பால்காய்ச்சுக்கு அழைக்கப்பட்ட யானைக்கு மதம் பிடித்தது - ஒருவர் பலி!

குருவாயூரில் வீடு பால்காய்ச்சு விழாவைச் சிறப்பிப்பதற்காக அழைக்கப்பட்ட யானை மதம் பிடித்து ஓடியது. யானை மிதித்து பால்காய்ச்சுக்கு வந்த ஒருவர் மரணடைந்தார், 8 பேர் காயம் அடைந்தனர்.

யானை


கேரள மாநிலம் குருவாயூரில் கோட்டப்படி என்ற பகுதியில் ஒரு வீடு பால்காய்ச்சு (கிரகபிரவேசம்) விழா நடந்தது. விழாவைச் சிறப்பிக்கும் விதமாக ராமச்சந்திரன் என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. திருச்சூர் மாவட்டம் பேராமங்கலம் தெற்றிகோட்டு காவு கோயில் யானையான ராமச்சந்திரன் கேரளத்தில் இப்போது உள்ள யானைகளில் அதிக உயரம்கொண்டதாகும். 50 வயது கடந்த ராமச்சந்திரன் யானை பால்காய்ச்சு வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்தது.

ராமச்சந்திரன்

வீட்டின் முன்புறம் பால்காய்ச்சுக்காக வந்திருந்த உறவினர்கள் இருந்தனர். அப்போது அருகில் உள்ள ஒரு காம்பவுண்டில் சிலர் பட்டாசு வெடித்தனர். பட்டாசு சப்தத்தால் மிரண்ட ராமச்சந்திரன் யானை மதம் பிடித்து அப்பகுதியில் ஓடியது. அப்போது பால்காய்ச்சு வீட்டிற்கு வந்திருந்த கண்ணூரைச் சேர்ந்த பாபு என்பவரை யானை மிதித்தது. அதில் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் யானை மிதித்ததில் 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் குன்னம்குளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.