`தி.மு.க-வுக்குத் தாவத் திட்டம்?' - அதிரடியாக நீக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்! | krishnakiri rajni makkal mandram secretary removed from the party

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (09/02/2019)

கடைசி தொடர்பு:10:45 (09/02/2019)

`தி.மு.க-வுக்குத் தாவத் திட்டம்?' - அதிரடியாக நீக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்!

ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் மதியழகன் மன்றத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ரஜினி

முன்னதாக மதியழகன், தி.மு.கவுக்கு செல்லவுள்ளதாக விகடனில் முதன்முதலாக செய்தி வெளியிடப்பட்டது, தற்போது அவரை நீக்கி ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்த மதியழகன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மாவட்ட இணை செயலாளராக இருந்த சீனிவாசன் இன்று மாவட்ட செயலாளராக தலைவரின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளார். சீனிவாசனுக்கு அனைத்து மன்ற நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. ரஜினி குடும்பத்தினரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமம். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருப்பவர் மதியழகன். ரஜினி அண்ணன் சத்தியநாராயணாவின் சிபாரிசில் மதியழகன் மாவட்டச் செயலாளராக ஆனார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள்

மதியழகன் தொழில் அதிபராக இருக்கிறார். குறுகிய காலத்தில் அரசியலில் பிரபலமாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளவர். மன்றத்தை வளர்ப்பதில் தீவிர ஆர்வம் செலுத்திவந்திருக்கிறார். இதற்காக, நிறையச் செலவும் செய்திருக்கிறார். ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள யாரும் தன்னை மதிப்பதில்லை என்று புலம்பி வந்திருக்கிறார். மக்கள் மன்றத்தினர் கிருஷ்ணகிரிக்கு வந்தால், மதியழகனை அழைக்காமல் இங்கிருக்கும் இன்னொரு நபரை அழைத்துப் பேசுவார்களாம்.

இந்த மாதிரியான செயல்பாடுகளால் தலைமை மீதான அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். அதிருப்தியால் மதியழகன் திமுகவில் இணையப்போகிறார் என்ற செய்தியும் வெளிவந்தன. இந்த நிலையில் தான் அவர் மக்கள் மன்றத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே பேசும் பொருளாகியுள்ளது.

திமுகவில் இணைந்தவர்கள்

இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களை வரவேற்று திமுக துண்டிகளை வழங்கினார் ஸ்டாலின்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க