செவிலியரின் கவனக்குறைவால் உயிரிழந்ததா பச்சிளம் குழந்தை? - கோவை மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை | Protest in front of Coimbatore Ramakrishna hospital

வெளியிடப்பட்ட நேரம்: 00:44 (09/02/2019)

கடைசி தொடர்பு:00:44 (09/02/2019)

செவிலியரின் கவனக்குறைவால் உயிரிழந்ததா பச்சிளம் குழந்தை? - கோவை மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை

கோவையில், பிறந்த குழந்தையை செவிலியர் கீழே போட்டு உயிரிழக்க வைத்ததாக கூறி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்


கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி விக்ரம் மற்றும் பவித்ரா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேலாகும் நிலையில், மகப்பேறு சிகிச்சைக்காக, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் லலிதா என்கின்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்து வந்தனர். இதையடுத்து, ராமகிருஷ்ணா மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இன்குபெட்டரில் அனுமதித்த மருத்துவர்கள், இன்று அந்த குழந்தை உயிரிழந்ததாக அறிவித்தனர். மிகுந்த சோகத்துடன் இறுதி சடங்குக்கு சென்ற உறவினர்கள், அப்போது குழந்தையின் தலையில் பலத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்து விசாரித்ததில் செவிலியர் ஒருவர், குழந்தையை கைத்தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த உறவினர்களும், நண்பர்களும் ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் விக்ரம், பவித்ரா உறவினர்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வைத்துள்ளனர்.

போராட்டம்

குழந்தை உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்களை மருத்துவமனை நிர்வாகம் அடுக்கியுள்ளது. ஆனால், விக்ரம் குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை. வேண்டுமானால், பிரேத பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளனர். அதற்கு உறவினர்கள் தரப்பினர் மறுத்துவிட்டு குழந்தைக்கு இறுதி சடங்கு செய்தனர்..