கோவையில் குட்டி யானையைச் சீண்டும் போதை ஆசாமி - அதிர்ச்சி வீடியோ! | Coimbatore: Man touched calf elephant video going viral

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (09/02/2019)

கடைசி தொடர்பு:10:30 (09/02/2019)

கோவையில் குட்டி யானையைச் சீண்டும் போதை ஆசாமி - அதிர்ச்சி வீடியோ!

கோவை ஆனைக்கட்டி அருகே, குட்டி யானையை ஒரு மனிதர் தொந்தரவு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

யானை

கோவை, தடாகம் முதல் ஆனைக்கட்டி வரையிலான பகுதிகள் வனத்தின் அருகே இருப்பதால் அங்கு யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். மக்களில் சிலர் யானைகளுக்குத் தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்து வரும் நிலையில், பல மனிதர்கள் யானைகளைக் கல் எடுத்து அடிப்பதும், தொந்தரவு செய்வதையும் வாடிக்கையாகச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆனைக்கட்டி அருகே ஒரு பேருந்து சென்றுள்ளது. அந்த நேரத்தில் அங்கு ஒரு குட்டி யானை சாலை ஓரத்தில் இருந்துள்ளது. எதிர்த் திசையில் வந்த ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் அந்தப் பேருந்தும் யானை செல்வதற்காக காத்திருந்தன. இதனிடையே, பேருந்திலிருந்து இறங்கிய ஒரு நபர் வேக வேகமாக யானையின் அருகே நடந்து சென்றார். பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் பதற, அந்த நபர் யானையைத் தொட்டுவிட்டு ஓடத்தொடங்கினார். அந்த நபரை யானையும் துரத்திக் கொண்டே செல்கிறது. சம்பவத்தின் போது, அந்த நபர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

யானை தொந்தரவு

யானை எந்தத் தொந்தரவும் செய்யாமல் அமைதியாக இருக்க, அந்த நபர் யானையைத் தொந்தரவு செய்தது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இது. தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.