`படிச்சிக்கிட்டு இருந்தோம்; திடீர்ன்னு ஒரு சத்தம்!'- வகுப்பறை அதிர்ச்சியைக் கூறும் மாணவர் | Few were injured after fan falling on the students

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (09/02/2019)

கடைசி தொடர்பு:11:10 (09/02/2019)

`படிச்சிக்கிட்டு இருந்தோம்; திடீர்ன்னு ஒரு சத்தம்!'- வகுப்பறை அதிர்ச்சியைக் கூறும் மாணவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி அரசு நடு நிலைப்பள்ளி வகுப்பறை ஒன்றின் மேற்கூரை இடிந்து மேலே சுழன்று கொண்டு இருந்த மின்விசிறி படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்ததில் காயமடைந்தனர். 

மின்விசிறி விழுந்து படுகாயம் அடைந்த மாணவர்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவர்கள் வரையிலும் படிக்கும் இந்தப் பள்ளியின் கட்டடம் கடந்த சில ஆண்டுகளாகச் சிதிலமடைந்து காணப்படுகிறது. இங்குள்ள சில வகுப்பறைகள் முற்றிலும் பெயர்ந்து இடிந்து விழும் நிலையிலேயே காட்சியளிக்கிறது. பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், `சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகமும் அரசும் கண்டுகொள்ளவில்லை' என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், இங்கு 7-ம் வகுப்புக்கான கட்டடத்தில் மாணவர்கள் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். அப்போது, கான்கிரீட் கட்டடத்தின் மேற்கூரை உடைந்தது. இதனால், மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென மாணவர்களின் மீது விழுந்தது. இதில், விமல்ராஜ் (13) என்ற மாணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சில மாணவர்கள் லேசான காயமடைந்தனர். இதைப்பார்த்த ஆசிரியர்கள், மாணவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு மாணவர்கள் வீடு திரும்பினர்.

மோசமான பள்ளி கட்டடம்

மாணவர் விமல்ராஜ் கூறும்போது, `கிளாஸ்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்தோம். திடீரென்று ஒரு சத்தம் கேட்டுச்சு. கண்ணமூடி, கண் திறப்பதற்குள்ள தலையில் மின்விசிறி விழுந்திருச்சு. உடனே எனக்கு மயக்கம் வந்திருச்சு. ஆசியர்கள்தான் முதலுதவி செய்தார்கள். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்த பிறகு இப்போது ஓரளவு குணமாகிருச்சு. லீவு எடுத்தால் படிப்பு பாதிக்கப்படும். அதனால், மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டேன்" என்கிறார்.

மேற்கூரை இடிந்து அதில் இருந்த மின்விசிறி மாணவர் தலையில் விழுந்து அவர் காயமடைந்த நிலையில் அதே வகுப்பறையில், தொடர்ந்து மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.