``மனம் திருந்தத்தான் சிறைச்சாலைகள்; சித்ரவதை செய்ய அல்ல!"- அற்புதம்மாள் உருக்கம் | Prisons are not for torture says arputhammal in karur

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (09/02/2019)

கடைசி தொடர்பு:11:30 (09/02/2019)

``மனம் திருந்தத்தான் சிறைச்சாலைகள்; சித்ரவதை செய்ய அல்ல!"- அற்புதம்மாள் உருக்கம்

``குற்றவாளிகள் தங்களது தண்டனைக் காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டதுதான் சிறைச்சாலைகள். அவர்களை சித்ரவதை செய்வதற்காக அல்ல" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கரூரில் உருக்கமாகப் பேசினார்.

மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். தனது மகன் பேரறிவாளனை விடுவிக்கும்படி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார் அவரது தாயார் அற்புதம்மாள். `மாநில அரசு தாராளமாக 7 பேரை விடுவித்துக்கொள்ளலாம்' என்று உச்சநீதிமன்றம் சொன்னது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு, 7 பேர் விடுதலைக்காகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அதை ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் தரப்பிலிருந்து 7 பேர் விடுதலைக்கான உத்தரவு இன்னும் வராத நிலையில், அதற்காக மாவட்டம்தோறும், `மக்கள் சந்திப்பு' என்ற பெயரில் பயணம் போகிறார் அற்புதம்மாள்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்துக்கு அவர் வருகை தந்தார். கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பு நிர்வாகிகள் பலரும் 7 பேர் விடுதலை குறித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து, தமிழக அரசும், மத்திய அரசும் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அற்புதம்மாள்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ``குற்றவாளிகள் தங்களது தண்டனைக் காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து, மனம் திருந்த அமைக்கப்பட்டதுதான் சிறைச்சாலைகள். அவர்களை சித்ரவதை செய்ய அல்ல. சட்டத்தின் பால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அதேசட்டத்தின் பால் பணியாற்றும் தமிழக ஆளுநர் சட்டத்தை மதித்து, ராஜீவ் கொலை குற்றவாளிகள் எனக் கருதப்படும் 7 பேரையும் விடுதலை செய்ய உடனே கையெழுத்திட வேண்டும். ஆளுநர் கையெழுத்து இடும் வரை மக்களைச் சந்திக்கும் எனது பயணம் தொடரும். அவர் கையொப்பம் செய்தால், அடுத்த கணமே எனது பயணத்தை ரத்து செய்வேன். ஒரு பெத்த தாயாக பேரறிவாளன் விடுதலைக்காக உங்களிடம் மன்றாட வந்திருக்கிறேன்" என்று உருக்கமாகப் பேசினார்.