லத்தியால் தாக்கிய போலீஸ்... நிலைகுலைந்து விழுந்த வாலிபர்... வாகனச் சோதனையில் பறிபோன உயிர் | young man fallen and dead after the police attack

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (09/02/2019)

கடைசி தொடர்பு:11:50 (09/02/2019)

லத்தியால் தாக்கிய போலீஸ்... நிலைகுலைந்து விழுந்த வாலிபர்... வாகனச் சோதனையில் பறிபோன உயிர்

வேலூர் அருகே பைக்கை நிறுத்தாமல் சென்ற வாலிபரின், சட்டையை போலீஸார் எட்டிப்பிடித்து இழுத்ததால், நிலைதடுமாறிய வாலிபர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபரின் சாவுக்குக் காரணமான போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த வாலிபர்

வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). சலூன் கடை வைத்திருக்கிறார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இருவரும் உறவினர்கள். ஆரணியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை பைக்கில் சென்ற இருவரும், மாலையில் வீடு திரும்பினர். பைக்கை விக்ரம் ஓட்டினார். விக்னேஷ், பின்னால் அமர்ந்து வந்தார். கணியம்பாடியில் உள்ள வேலூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே வேலூர்- ஆரணி சாலையில் குறுக்கே தடுப்புகளை வைத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை, பைக்கை நிறுத்தும்படி போலீஸார் கைகாட்டினர். பைக்கை நிறுத்தாததால், லத்தியால் தாக்கியதோடு பின்னால் அமர்ந்து சென்ற விக்னேஷின் சட்டையை போலீஸார் எட்டிப்பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. அப்போது, பின்புறம் வந்த லாரியில் சிக்கியதில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பைக் நொறுங்கியது.

போலீஸ் லத்தியால் தாக்கியதில் லாரியில் சிக்கி உயிரிழந்த வாலிபர்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஏராளமானோர், சம்பவ இடத்தில் திரண்டு போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை சமரசப்படுத்திய போலீஸார், உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த உறவினர்கள், நேற்றிரவு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். வாலிபரின் சாவுக்குக் காரணமான போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதோடு, அவர்களை பணியிலிருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வேலூர்-ஆரணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த வாலிபர்

இதனால், அங்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பிக்கள் லோகநாதன், ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்திச் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம், வேலூர் மக்களிடையே அதிர்ச்சியையும், போலீஸார் மீது கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.