`சந்தேகத்தால் பெண் எரித்துக் கொலை!’ - இரண்டாவது கணவனுக்கு ஆயுள் தண்டனை | girl burning case her second husband was sentenced to life imprisonment

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (09/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (09/02/2019)

`சந்தேகத்தால் பெண் எரித்துக் கொலை!’ - இரண்டாவது கணவனுக்கு ஆயுள் தண்டனை

காட்பாடியில், மனைவியை எரித்துக் கொன்ற இரண்டாவது கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவியை எரித்துக் கொன்ற இரண்டாவது கணவன்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையைச் சேர்ந்தவர் மஞ்சுளா (34). இவருக்கும், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த தயாளன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தயாளனுடன் ஏற்பட்ட தகராறில் மஞ்சுளா, அவரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பிரம்மதேசம் பெரிய தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாளுடன் (41), மஞ்சுளாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.

பெருமாளும், ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவர் என்பதால், அவருடன் மஞ்சுளா நெருக்கமானார். இருவரும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, காட்பாடி பாரதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தனர். பெருமாள், லாரி வேலைக்குச் சென்றுவிட்டால், மாதத்துக்கு இருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார். ஆனாலும், வேலையில் இருக்கும்போது மனைவிக்குத் தினமும் போன் செய்து பேசியுள்ளார். அடிக்கடி போன் செய்தபோது, மஞ்சுளாவின் போன் எண் நீண்ட நேரமாக பிஸியாகவே இருந்துள்ளது.

இதனால், பெருமாளுக்கு மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி, வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தார். மஞ்சுளாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அறிமுகமில்லாத சில நபர்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்களுடன் பலமணி நேர உரையாடலில் மஞ்சுளா இருந்துள்ளதைப் பெருமாள் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக, கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பெருமாள், மனைவி மஞ்சுளாவை கொடூரமாகத் தாக்கினார். லாரியில் வைத்திருந்த டீசலை எடுத்துவந்து, மஞ்சுளா மீது ஊற்றித் தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுதொடர்பாக, காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெருமாளைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்துவந்த வேலூர் மகளிர் நீதிமன்றம், குற்றவாளி பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், பெண்கள் வன்கொடுமைப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில், பெருமாள் அடைக்கப்பட்டார்.