`உபகரணங்கள் இல்ல, விடுமுறை கிடையாது!'- தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினரிடம் துப்புரவாளர்கள் கண்ணீர் | sweeping workers tears in front of National Rehabilitation Commission member

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (09/02/2019)

`உபகரணங்கள் இல்ல, விடுமுறை கிடையாது!'- தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினரிடம் துப்புரவாளர்கள் கண்ணீர்

``கையால் மலம் அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் சமீபத்தில்கூட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். துப்புரவுப் பணியாளர் மரணம் என்பது இனியும் நிகழக் கூடாது'' என தேசிய துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹர்மணி தெரிவித்தார்.

விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களின் பணிகள் குறித்து தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹர்மணி ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆணையர்

அப்போது, தங்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. தங்கள் பி.எப். கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது எனத் தெரியவில்லை. அதிகாலையே எழுந்து வேலைக்குச் செல்கிறோம். சில நேரங்களில் தகரங்கள் குத்திவிடுவதால் கைகளில் காயம் ஏற்படுகிறது. பல சிரமங்களுக்கு நடுவிலேயே பணிபுரியும் தங்களுக்கு ரூ.200 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. ஒருநாள் கூட விடுமுறை கிடையாது. சில நேரங்களில் முதல் மாதச் சம்பளம் அடுத்த மாதமே வழங்கப்படுகிறது எனத் துப்புரவுப் பணியாளர்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.

ஆணையர்

தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சக்திவேல் கூறும்போது, ``பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசாணை எண் 62-ன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம் உள்ளது. ஆனால் அந்தத் திட்டம் குறித்து அதிகாரிகள் யாரும் துப்புரவுப் பணியாளர்களிடம் தெரிவிப்பதில்லை. இந்தத் திட்டத்தால் யாரும் பயனடையவில்லை.

ஆணையர்

கையால் மலம் அள்ளுவதற்கு 2013-ம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய விழிப்புஉணர்வு இல்லாததால் சமீபத்தில் கூட அருப்புக்கோட்டையில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது துப்புரவுத் தொழிலாளி உள்ளே விழுந்து பலியாகியுள்ளார்'' எனத் தெரிவித்தார்.

ஆணையர்

தேசிய துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையர் ஜெகதீஸ் ஹர்மணி கூறுகையில், ``நகரங்களில் சுகாதாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல துப்புரவுப் பணியாளர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். கையால் யாரும் மலம் அள்ளவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நேற்று முன்தினம்கூட துப்புரவுத் தொழிலாளி ஒருவர் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிந்துள்ளார். நாளை நகராட்சிப் பகுதியிலும் இதேபோன்ற நிகழ்வு ஏற்படலாம். மரணத்துக்குப் பின் கொடுக்கும் 10 லட்சம் பணம் அவர்களின் உயிருக்கு ஈடாகாது. எனவே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏதும் இனி ஏற்படக்கூடாது.

ஆணையர்

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் செப்டிக் டேங்க் துப்புரவுப் பணியில் உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயதொழில் செய்ய ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அடுத்த மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.550 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வோர் ஊழியரின் பி.எப். கணக்கிலும் எவ்வளவு பணம் உள்ளது எனச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளிலிருந்து ஒரு வாரத்துக்குள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காவிட்டால் யாரும் பணிபுரிய வேண்டாம். உங்களுக்குச் சம்பளம் கிடைக்கும்.

ஆணையர்

2022-ம் ஆண்டுக்குள் துப்புரவுப் பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி சார்பில் சொந்த வீடு கட்டித் தர வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ வர வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் துப்புரவுப் பணியாளர்களின் குறைகளை கேட்டு அதைத் தீர்க்க வேண்டும். ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் யாரும் ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அப்போதுதான் துப்புரவுப் பணியாளர்களின் குறைகள் தீர்க்கப்படும்'' எனத் தெரிவித்தார்.