மணல் சிற்பம் அமைத்து வித்தியாசமாக விழிப்புஉணர்வு ஏற்படுத்திய போலீஸ்! | Police department created awareness by crafting sand arts

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (09/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (09/02/2019)

மணல் சிற்பம் அமைத்து வித்தியாசமாக விழிப்புஉணர்வு ஏற்படுத்திய போலீஸ்!

சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு ராமேஸ்வரம் காவல் துறையினர் மணல் சிற்பம் அமைத்து  வாகன ஓட்டிகளுக்கு  விழிப்புஉணர்வு ஏற்படுத்தினர்.

மணல் சிற்பம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
 

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரும் நிலையில் அதற்கு ஈடாக சாலை விபத்துகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதனால் ஏற்படும் விலை மதிப்பு இல்லா உயிரிழப்புகளைத் தடுக்க நீதிமன்றம், காவல்துறை ஆகியன பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் வாகன ஓட்டிகளிடம் இது குறித்த விழிப்புஉணர்வு இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. இதனால் விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 959 விபத்துகள் நடந்ததில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 75% உயிரிழப்புகள் இரு சக்கர வாகனத்தினால் ஏற்பட்டதாகும்.

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மணல் சிற்பம்

 இத்தகைய விபத்துகளை தவிர்க்கவும், தடுக்கவும் தமிழக அரசு போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து மாநிலம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரத்தினை ஆண்டு தோறும் கடைப்பிடித்து வருகின்றனர். பிப்ரவரி 4 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை விபத்து இன்றி இயக்குதல், சீட் பெல்ட் அணிதலின் அவசியம், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

ராமநாதபுரத்தில் நடந்த 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. டி.ஐ.ஜி காமினி முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தலைக் கவசம் அணிந்து இரு சக்கர வாகன பேரணியில் சென்றனர். இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக் கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணன் அமைத்திருந்த இந்த மணல் சிற்பத்தினை பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.