காளையை பிடிக்கச் சென்ற உரிமையாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!- நெடுங்குளம் ஜல்லிக்கட்டில் சோகம் | bull owner died by heart attack at nedungulam jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (09/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (09/02/2019)

காளையை பிடிக்கச் சென்ற உரிமையாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!- நெடுங்குளம் ஜல்லிக்கட்டில் சோகம்

திருவில்லிபுத்தூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையை பிடிக்கச் சென்ற காளை உரிமையாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா போட்டியை தொடங்கி வைத்தார். இதில் விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250 காளைகள் வந்திருந்தன. மாடுபிடி வீரர்கள் 100 பேர் போட்டியில் பங்கேற்றனர். வீரர்கள் அனைவரும் குழு வாரியாக தனித்தனியாக களமிறங்கினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் அடங்காமல் தப்பிச் சென்ற காளைகளுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்கக்காசு, வெள்ளிக்காசு, குத்துவிளக்கு போன்ற பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டம் கோசாகுளத்தை சேர்ந்த வீரமணி (28) என்ற காளை உரிமையாளர் போட்டிக்கு காளையை அழைத்து வந்திருந்தார்.

ஜல்லிக்கட்டில் காளை அடக்கும் வீரர்

வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளையை பிடிப்பதற்காக அதன் பின்னால் ஓடினார். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் 345 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.