‘திருமண நிதியுதவி வேண்டுமா... லஞ்சம் கொடு!’ - விஜிலென்ஸ் பிடியில் சிக்கிய பெண் அதிகாரி | Bribery collected by the Social Welfare Extension Officer

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (09/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (09/02/2019)

‘திருமண நிதியுதவி வேண்டுமா... லஞ்சம் கொடு!’ - விஜிலென்ஸ் பிடியில் சிக்கிய பெண் அதிகாரி

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப் பயனாளிகளிடம் லஞ்சம் வசூலித்த, குடியாத்தம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பிடிபட்டார். அவரிடம், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாவித்திரி

வேலூர் மாவட்ட சமூக நலத்துறை மூலம் படித்த இளம்பெண்களுக்கு, திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பரவலாகப் புகார்கள் அடுக்கப்படுகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சமூக நலத்துறை அலுவலகத்தில், ‘தாலிக்குத் தங்கம்’ வழங்கப் பயனாளிகளிடம் லஞ்சம் வசூலித்ததாக, கடந்த டிசம்பர் 31-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசியமாகப் புகார்கள் சென்றன. உடனடியாக போலீஸார், அங்குச் சென்று அதிரடியாகச் சோதனை செய்தனர். பீரோவுக்கு அடியில், சுவாமி படங்களுக்கு பின்னால், டாய்லெட், டஸ்பின், டிபெஃன் பாக்ஸ் என பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத 76 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும், சமூக நலத்துறையில் இன்று காலை தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப் பயனாளிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறை பெண் அதிகாரிகள் இருவர், பயனாளிகள் போர்வையில் சமூக நலத்துறை அலுவலகத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நோட்டமிட்டனர். அப்போது, ரூ.500 முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை, பயனாளிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, அதிரடியாகச் சமூக நலத்துறை அறைக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், விரிவாக்க அலுவலர் சாவித்திரியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து, கணக்கில் வராத 34 ஆயிரத்து 70 ரூபாயைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக, சாவித்திரியிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.

தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்க, சமூக நலத்துறையில் உள்ள விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர் நல அலுவலர்கள் மூலம்தான் உயரதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் செல்கிறது. தற்போது, சிக்கியுள்ள விரிவாக்க அலுவலர் சாவித்திரி, எந்தெந்த உயரதிகாரிகளுக்கெல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்துவருகிறார் என்பது குறித்தும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.