'எங்களின் அடையாளம் இது!'- கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆலமரத்திற்கு உயிர்கொடுத்த இளைஞர்கள் | Pudukottai youths give new life to banyan tree

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:03:30 (10/02/2019)

'எங்களின் அடையாளம் இது!'- கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆலமரத்திற்கு உயிர்கொடுத்த இளைஞர்கள்

புதுக்கோட்டை அருகே கரிசக்காடு கிராமத்தில் கஜா புயலால் சாய்ந்து விழுந்த 200வருட பழைமையான ஆலமரத்தை, ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் அதே பகுதியில் நடவு செய்து மரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். 

பல வருடங்களாகச் செழித்து வளர்ந்து  பசுமை போர்த்திய மரங்கள் அனைத்தையும், ஈவு, இறக்கமின்றி ஒரே நாளில் முழுவதுமாக சிதைத்து போட்டு விட்டுச் சென்றது கஜா புயல். ஆலமரம், அரசமரம் என பழைமை வாய்ந்த மரங்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. பல வருடங்கள் கம்பீரமாக நாட்டாமை செய்த பழைமையான மரங்கள் தற்போது இருந்த இடமே தெரியாத நிலை தான் உள்ளது.இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரிசக்காடு கிராமத்தில் கஜா புயலில் சாய்ந்த சுமார் 200 வருட பழைமை வாய்ந்த ஆலமரத்தை இளைஞர்கள் இனைந்து இருந்த இடத்தில் மீண்டும் நடவு செய்து மரத்திற்கு உயிர் அளித்துள்ளனர். இதனை அருகே உள்ள கிராமத்தினர் பார்த்து இளைஞர்களைப் பாராட்டி வருகின்றனர். 

அவர்களிடம் பேசினோம். ``எங்கள்  ஊரின் மத்தியில் உள்ள இந்த ஆலமரம் தான் எங்கள் ஊரின் அடையாளம்.  மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி ஆலமரத்திற்கு வந்துவிடுவோம். வேலை நேரத்தைத் தவிர்த்து, வீட்டை விட ஆலமரத்தில் தான் அதிக நேரம் இருப்போம். அந்தளவிற்கு ஆலமரத்திற்கும் எங்களுக்கும் நெருக்கம் அதிகம். புயலுக்கு முன்னால் ஆலமரம் இருந்த இடமே பசுமை போர்த்தியது போல் காட்சியளிக்கும். 100பேர் அந்த இடத்தில் கூடினாலும், அனைவருக்கும் நிழல் கொடுக்கும். இப்படி, எங்களின் உயிரையே கஜா புயல் சூறையாடிச் சென்றது.

மரம் சாய்ந்து விழுந்தது எண்ணி அனைவரும் கவலையில் இருந்தோம். பிறகு எப்படியாவது   மீண்டு நடவு செய்ய வேண்டும் என்று எண்ணி நாங்களே களத்தில் இறங்கி மரத்தின் கிளைகளை வெட்டினோம். சிலர் மீண்டும் மறு நடவு செய்தால், மரம் பழைய நிலைக்குத் திரும்பாது என்று பயமுறுத்தினர். ஆனாலும், அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. நம்பிக்கையுடன் மீண்டும் மர நடவு செய்துள்ளோம். எங்கள் அடையாளத்தை மீண்டும் மீட்பது எங்களின் கடமை. விரைவில் பழைய நிலைக்கு இந்த இடம் திரும்பும்’’ என்கின்றனர் மிகுந்த நம்பிக்கையுடன்.