‘பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்' - பெ.மணியரசன் வேண்டுகோள் | Need Vallalar Establishment Centers in all TN universities says Maniyarasan

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (10/02/2019)

கடைசி தொடர்பு:11:50 (10/02/2019)

‘பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்' - பெ.மணியரசன் வேண்டுகோள்

தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாக விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெயரில், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்

.

கும்பகோணம், சிதம்பரம், மதுரை, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா கொண்டாட்டப்பட்டு வருகிறது. இதில் தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் பெரும் திரளாக ஆர்வத்தோடு பங்கேற்று வருகிறார்கள். இப்பெருவிழாவில் வள்ளலார் வழி தமிழர் மருத்துவம், வள்ளலார் வழி இறைநெறி ஆகிய தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்கங்கள் இடம்பெற்று வருகின்றன. மருத்துவர் தெட்சணாமூர்த்தி, இறைநெறி இமயவன் உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கி வருகிறார்கள்.

இப்பெருவிழா குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ‘’சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்வைத்துப் பரப்பியவர், வள்ளலார் இராமலிங்க அடிகள். இவர் தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் ஆவார். மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர். வள்ளலார் சிந்தனைகள் மனிதகுலத்திற்கு முன் எப்போதையும்விட இப்போது தேவை என்பதை உலக நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. வள்ளலாரின் பல துறைச் சிந்தனைகளை ஆய்வு செய்து, பரப்புவதற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் “வள்ளலார் இராமலிங்க அடிகளார் உயராய்வு மையங்கள்” அமைக்க வேண்டும் என “வள்ளலார் பெருவிழா”வின் வழியாக தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது” என்றார்.