‘அரசு நிலத்தில் வீடு கட்ட முயன்ற அ.தி.மு.க பிரமுகர்!’ - அதிரடியாக தடுத்து நிறுத்திய பெண் அதிகாரி | "The AIADMK leader who occupied government land!" - officials Recovered

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:08:38 (11/02/2019)

‘அரசு நிலத்தில் வீடு கட்ட முயன்ற அ.தி.மு.க பிரமுகர்!’ - அதிரடியாக தடுத்து நிறுத்திய பெண் அதிகாரி

நாட்றம்பள்ளியில், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், அங்கு வீடு கட்ட முயன்றார். இதையறிந்த அதிகாரிகள், கட்டுமான பொருள்களை அகற்றி நிலத்தை அதிரடியாக மீட்டனர்.

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அண்ணா தெரு சடலகுட்டை பகுதியில், பேரூராட்சிக்குச் சொந்தமான சமுதாய கூடம் உள்ளது. இதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் டைகர் இளங்கோ என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டுவதற்காக இரவு நேரங்களில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகப் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செயல் அலுவலர் விஜயா தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள், அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆய்வில், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அ.தி.மு.க பிரமுகர் டைகர் இளங்கோ வீடு கட்டுவது தெரியவந்தது. 

இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டுமானங்களை, பேரூராட்சி பணியாளர்கள் அதிரடியாக இடித்து அகற்றினர். கட்டுமான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 20-க்கும் அதிகமான இடங்களில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி செயல் அலுவலரிடம், பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி, கலெக்டரிடம் தெரிவித்து ஆக்கிரமிப்பு இடங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுப்பதாகச் செயல் அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.