கணினி கொள்ளை; பைக் எரிப்பு! - திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கைவரிசை | Computer theft in Thiruvarur Collector Office

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (10/02/2019)

கடைசி தொடர்பு:15:10 (10/02/2019)

கணினி கொள்ளை; பைக் எரிப்பு! - திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் உள்ள கணினியை சில மர்ம நபர்கள் திருடிவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் பைக்கில் தீ வைத்து எரித்துச் சென்றுள்ளனர். 

ஆட்சியர் அலுவலகம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் இரவு 12.45 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். கருவூலத்தில் இருந்த கணினியை திருடிவிட்டு வெளியே வந்த மர்ம நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் ராஜேந்திரன் என்பவரது மோட்டார் பைக்யை தீயிட்டுக் கொளுத்தி விட்டுச் சென்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறைக்கு அருகே அந்த பைக் நின்றதால், வாக்கு இயந்திரங்களை எரிப்பதற்காக முயற்சி செய்துள்ளார்களா என்ற கேள்வியும் காவல்துறையினர் மத்தியில் எழுந்துவருகிறது. 

ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட கருவூலத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து பத்திரங்கள் மற்றும் அவசரக் காலத்திற்கான பண பரிமாற்றங்கள் ஆகியவை உள்ளன. ஒரு மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் கருவூலத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.  அப்போது அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் இரவு நேரப் பணியில் இருந்த பெண் காவலர்களை விசாரித்தனர்.

அப்போது அந்த பெண் காவலர்களில் ஒருவர் கூறும்போது, ‘ இரவு 12.45 மணி இருக்கும் இரண்டுபேர் வந்தனர். நீங்கள் யார் எனக் கேட்டேன் நாங்கள் அலுவலர்கள் எனக் கூறிவிட்டு உள்ளே நுழைந்து கணினியை எடுத்துச் சென்றனர்’ எனக் கூறினார். அதற்கு தடயவியல் நிபுணர்  ‘நீங்கள் காவலர்தானே வந்தவர்களிடம் ஐடி கார்டு இருக்கிறதா என கேட்கமாட்டீர்களா’ எனக் கேட்டார்‌ அதற்கு வார்த்தைகள் இல்லாமல் பெண் காவலர் அமைதியாக  நின்றுகொண்டிருந்தார். 

ஆட்சியர் அலுவலகம்

இந்த சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தபோது,  ‘நாங்கள் சில நாட்கள் இரவு நேர பணியில் ஈடுபடுவோம் அப்போது நாங்கள் வெளியே சென்று வந்தால் கூட இரவு நேர பணியில் ஈடுபடும் காவலர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்பார்கள். உண்மையான ஊழியர்களை இவ்வளவு கேள்வி கேட்ட காவல்துறையினர் இப்போது கோட்டை விட்டுள்ளனர். 

திருடு போனபோது காவல்துறையினர் இருந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. மாவட்டத்தின் முக்கிய பங்கான கருவூல அலுவலகத்திற்கே அதற்கே இந்த நிலையென்றால் என்ன சொல்வது. இரவு நேர பணியில் ஏன் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் அதுவும் மூன்று பெண் காவலர்களில் இரண்டு பெண் காவலர்கள் கர்ப்பிணியாகவும் உள்ளனர் இவர்களால் திருட வரும் திருடர்களை எப்படித் தடுக்க முடியும்’ என்றார்.