போதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்த கேரள இளைஞர்கள்! - பரிதாபமாக உயிரிழந்த கூலித் தொழிலாளிகள் | Accident made by drunken kerala youth; 2 killed

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:07:23 (11/02/2019)

போதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்த கேரள இளைஞர்கள்! - பரிதாபமாக உயிரிழந்த கூலித் தொழிலாளிகள்

கேரள வாலிபர்கள் குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர  வாகனங்களில் வந்த இரண்டு பேர் பலியானார்கள். நான்கு பேர் காயம் அடைந்தனர்.

இறந்த இளைஞர்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சொகுசு கார் திருத்துவபுரம் பகுதியில் சென்றபோது தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த நான்கு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் பைக்கில் சென்ற கிரத்தூர் பகுதியைச் சேர்ந்த லியோன் மற்றும் ஷாஜி ஆகிய இரண்டுபேர் சம்பவ இடத்திலே இறந்தனர். இறந்த இளைஞர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த மகேஷ், கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த உடல் கல்வி ஆசிரியர் சுபின் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்த இளைஞர்

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டிவந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிக் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மது குடித்து போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.