`பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை அறிவிப்பில் குளறுபடி!’ - விளக்கும் விவசாயிகள் சங்கம் | The Prime Minister's announcement on Incentive is not available to most farmers

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:07:35 (11/02/2019)

`பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை அறிவிப்பில் குளறுபடி!’ - விளக்கும் விவசாயிகள் சங்கம்

சிறு, குறு விவசாயிகளுக்குக் கவுரவ உதவித்தொகையாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பார்த்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

விவசாயிகள்

 

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை காலங்களிலும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் ஆண்டு முழுவதும் நிலத்தில் இறங்கி உழைத்தாலும் போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை. இயற்கை இடர்பாடுகள், இடுபொருள்களின் விலையேற்றம், விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்காதது என இன்னும் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, தங்களது வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மத்திய-மாநில அரசுகள் தங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கவுரவ உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

விவசாயி

இத்திட்டம் குறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன் ``ஆண்டுக்கு 6,000 ரூபாய் என்பது மிகவும் குறைவான தொகை. இதுவும் கூட பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. யார் பெயரில் நிலம் இருக்கிறதோ, அவருக்குத்தான் இந்த உதவித்தொகை வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை இங்கு அதிகம். சாகுபடி பருவ காலங்களை அடிப்படையாகக் கொண்டு ஒத்திக்கு நிலம் பெற்று பயிர் செய்யக்கூடிய சிறு, குறு விவசாயிகளும் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்காது. தனிநபரின் பெயரில் உள்ள பட்டா நிலங்களுக்குதான் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டுப்பட்டாவாக உள்ள நிலத்தில் சாகுபடி செய்பவர்களுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்காது. பெரும்பாலான விவசாயக் குடும்பங்களில் தந்தை இறந்த பிறகு, அவர்களது வாரிசுகளின் பெயரில் கூட்டுப்பட்டாவில் தான் நிலம் இருக்கும். ஆனாலும் அக்குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக நிலத்தை பிரித்துக் கொண்டு விவசாயம் செய்கிறார்கள். இதுபோன்ற விவசாயிகளுக்கும் உதவித்தொகை கிடைக்காது. இத்தகைய விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தினால்தான் இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்குப் பலன் கொடுக்கும்.” எனத் தெரிவித்தார்.