திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கும்பாபிஷேகம்! - பக்தர்களுக்கு ஸ்பிரே முறையில் புனித நீர் | thirunallar kumbabishekam tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (10/02/2019)

கடைசி தொடர்பு:16:15 (11/02/2019)

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கும்பாபிஷேகம்! - பக்தர்களுக்கு ஸ்பிரே முறையில் புனித நீர்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனிச் சந்நிதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து நாளை கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறு

இதற்காக 8 கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை இரவு தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை, இரவு 2 மற்றும் 3-ம் கால பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, சனிக்கிழமை காலை மற்றும் இரவில் 4 மற்றும் 5-ம் கால பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகள் யாகசாலையில் கலாகர்ஷனம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுவதால், மூலவர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் நிறைவுபெறும் வரை, பக்தர்கள் சந்நிதிகளில் வழிபடமுடியாது என்பதால், யாகசாலையில் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், சனிக்கிழமை கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் சென்று, யாகசாலையில் வழிபட்டனர்.

திருநள்ளாறு

இதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெறவுள்ளன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருநள்ளாறு

கும்பாபிஷேகம் குறித்து மாவட்ட கலெக்டரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

``சனீஸ்வரர் தனிச் சந்நிதி கொண்ட தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி இறுதிக்கட்ட பணிகளாகக் கோபுரங்களில் கலசங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறு

சனீஸ்வர பகவான் சந்நிதியில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணிகளை நிறைவு செய்தல், விழாவுக்கு வரும் பக்தர்கள் திருநள்ளாறு பகுதியில் உள்ள அனைத்து நிரந்தர, தற்காலிக கழிப்பறைகளை தயார் நிலைக்குக் கொண்டு வருதல், மாவட்ட போக்குவரத்து துறை மூலம் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை உறுதி செய்துள்ளோம்.

எந்தப் பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தைக் கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் எந்தக் கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம். சனிப்பெயர்ச்சி விழாவின்போது செய்யப்பட்ட விரிவான வசதிகள் கும்பாபிஷேகம் விழாவிலும் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.  

படங்கள் : பா.பிரசன்னா

நீங்க எப்படி பீல் பண்றீங்க