``தகவல் தொடர்பு ரொம்ப முக்கியம்" - சென்னை சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் | Communication is more important, says doctors

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:07:47 (11/02/2019)

``தகவல் தொடர்பு ரொம்ப முக்கியம்" - சென்னை சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள்

``மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடைப்பட்ட தகவல் தொடர்பு (communication) எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு மருத்துவ ஆய்வக டெக்னீஷியனுக்கும், நோயாளிக்கும் இடையேயான தகவல் தொடர்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. நோயாளி, மருத்துவர், டெக்னீஷியன் ஆகியோரிடையேயான தகவல் தொடர்பும் சரியான முறையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நோயாளியின் தேவை அறிந்து சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியும்" என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் சர்வதேச கருத்தருங்கில் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

கருத்தரங்கு

சர்வதேச மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் மருத்துவத் தர நிர்வாகிகள் அமைப்பின் தமிழகக் கிளை (ஐக்யூஎம்ஏ - டிஎன்) சார்பில், மருத்துவ ஆய்வகங்களை மேம்படுத்துதல், ஆய்வகங்களின் தரம், எதிர்கால மருத்துவ சோதனை உபகரணங்கள் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கம் சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. 

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் என்று சுமார்  300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்களின் தரத்தை சர்வதேச அளவுக்கு எப்படி மேம்படுத்துவது என்று மருத்துவர்கள் விளக்கமளித்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கருத்தரங்கில் உடல் நலப் பாதுகாப்பு, நோயாளிகளின் உரிமைகள், நவீன மருத்துவ வளர்ச்சி, எதிர்கால ஆய்வக உபகரணங்கள் பற்றி மருத்துவர்கள் விளக்கமளித்தார்கள்.

கருத்தரங்கு

இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மருத்துவர் சுஷ்மா நாயர், ``மருத்துவர்கள் மற்றும் ஆய்வக டெக்னீசியன்கள் எழுதும் அறிக்கைகள் (Reports) எப்போதும் தெளிவான முறையில் இருக்க வேண்டும். தெளிவற்ற அறிக்கைகளால் நோயாளிகளுக்குத்தான் பிரச்னை ஏற்படுகிறது. நோயாளி, மருத்துவர், டெக்னீஷியன் ஆகியோருக்கு இடைப்பட்ட தகவல் தொடர்பு மிகமிக முக்கியமானதாகும். நோயாளிகளை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்று ஒவ்வொரு டெக்னீஷியனும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் தேவை அறிந்து செயல்படுவதே நமது முக்கியப்பணி" என்று தெரிவித்தார். 

கருத்தரங்கில் கலந்துகொண்ட மருத்துவ ஆய்வக டெக்னீஷியன் வசந்த், ``வழக்கமாக எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த ஃபார்முலா படி ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்போம். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு அந்த பார்முலாவ ஏன், எதற்காகக் கடைப்பிடிக்கிறோம். உபகரணங்கள் எப்படி செயல்படுகிறது, தவறான அறிக்கைகளால் ஏற்படும் விபரீதம், ஆய்வகங்களின் தரத்தை எப்படி உயர்த்துவது என்று நிறைய கற்றுக்கொண்டோம்" என்று தெரிவித்தார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க