குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் பலி! - கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முற்றுகை | Women died during operation in Asaripallam medical college hospital

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:07:52 (11/02/2019)

குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் பலி! - கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முற்றுகை

நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் குடும்பக்கட்டுப்பாடு செய்தபோது உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ஆஷா

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கானவிளைப் பகுதியை சேர்ந்தவர் விஜய். ராணுவ வீரரான விஜய்யின் மனைவி ஆஷா (29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆஷா கடந்த 9 நாள்களுக்கு முன்னர் பிரசவத்துக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஷாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.

கதறி அழும்தாய்

இந்த நிலையில், கடந்த புதன் கிழமை ஆஷாவுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சுய நினைவு இழந்த ஆஷா கடந்த மூன்று நாள்களாக கோமா நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஆஷாவைப் பார்க்க உறவினர்களைக் கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

முற்றுகை

இந்த நிலையில் இன்று காலை ஆஷா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகள் இறந்த தகவல் கேட்டு ஆஷாவின் தாய் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதார். மருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையும் ஆஷா உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ஆஷாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.