`அ.தி.மு.கவின் குரல்வளையை நெரிக்கிறது பா.ஜ.க!’ - முத்தரசன் | BJP gives pressure to ADMK over alliance alleges Muthrasaran

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:08:35 (11/02/2019)

`அ.தி.மு.கவின் குரல்வளையை நெரிக்கிறது பா.ஜ.க!’ - முத்தரசன்

`மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அ.தி.மு.கவின் குரல்வளையை நெரிப்பதுடன், தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட அதிக இடங்களைக் கேட்டு மிரட்டி வருகிறது' என புதுக்கோட்டையில் முத்தரசன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். ``தி.மு.க கூட்டணியில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து தொடர்ந்து ஒரு சில கருத்துகளை கூறி வருகிறார். இதேபோல், கமலஹாசன் தி.மு.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது ஏன் என்று தான் தெரியவில்லை. 

மத்தியில் ஆளும்  பா.ஜ.க அரசு ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அ.தி.மு.க-வின் குரல்வளையை நெரிப்பதுடன், தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட அதிக இடங்களைக் கேட்டு மிரட்டி வருகிறது. குறிப்பாக, வருமானவரித் துறையை வைத்து சோதனைகளால் அ.தி.மு.கவை மிரட்டி வருவதாக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எங்களிடம் தனியாகப் பேசும்போது சொல்கிறார்கள். இருப்பினும் பா.ஜ.க தமிழகத்தில் ஒருபோதும் வளராது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகளின் கூட்டணி தொடர்பான கருத்துகள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளன.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை பேசவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கேட்கும். கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொறுப்பு ஆகும்.

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின்போது  நேரில் வராத பிரதமர் மோடி தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள். கஜா புயல் பாதித்த இடங்களை மத்தியக் குழு ஆய்வு செய்துவிட்டுச் சென்றது. எதற்காக அக்குழு வந்தது. எதை அரசிடம் பரிந்துரை செய்தது என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியாகவில்லை. மர்மமாகவே உள்ளது இவை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்’’ என்றார்.