ஓடும் ரயிலில் அலறிய பயணிகள்! - கழிவறைக்குள் நடந்த துயரச் சம்பவம் | youth suicide in rail toilet at karur

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (11/02/2019)

கடைசி தொடர்பு:11:21 (11/02/2019)

ஓடும் ரயிலில் அலறிய பயணிகள்! - கழிவறைக்குள் நடந்த துயரச் சம்பவம்

ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று கரூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது ரயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் பயணித்த பயணிகள் காவல் துறையினரிடம், 'நீண்ட நேரமாகக் கழிவறை கதவு திறக்கப்படாமல் உள்ளது' என்று புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் குறிப்பிட்ட கழிவறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, கழிவறையில் உள்ள கொக்கியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர், தான் அணிந்திருந்த காவி வேட்டி மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக இருந்தது தெரியவந்தது. 

கரூர் ரயில்வே ஸ்டேஷன்
 

இதைப் பார்த்ததும், அந்தப் பெட்டியில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் யார், எதற்காக ரயில் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கரூர் ரயில் நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.