`ஆறுமுகசாமி விசாரணைக்குத் தடை கிடையாது!'- அப்போலோ மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் | high court rejects apollo hospital petition

வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (11/02/2019)

கடைசி தொடர்பு:11:41 (11/02/2019)

`ஆறுமுகசாமி விசாரணைக்குத் தடை கிடையாது!'- அப்போலோ மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பல்வேறு கட்ட விசாரணைகளை நிறைவு செய்துள்ள இந்த ஆணையம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. ஆனால், இந்த விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என அப்போலோ புகார் தெரிவித்திருந்தது. 

ஆறுமுகசாமி

``ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவைப்பட்டதா இல்லையா என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலமே தெரிந்துகொள்ளலாம். ஆனால், அந்த விவரங்கள் குறித்து மருத்துவம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால்தான் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்த வாக்குமூலங்கள் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

ஆனால், எங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தைப் புரிந்து பதிவு செய்துகொள்ளாமல் வாக்குமூலங்கள் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் எங்கள் விளக்கங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவ தெளிவு உள்ள மருத்துவர்கள் குழுவை நியமிக்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால், அதை ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்துவிட்டது.

அப்போலோ

மேலும், அரசு மருத்துவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய எங்களை அனுமதிக்கவில்லை. எங்கள் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆஜராகும்போது அவர்களின் பணி நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல் காக்க வைக்கிறது" என்று கூறி அப்போலோ நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும், வரும் 15-ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. அதேநேரம் அப்போலோ தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க