3 நாளில் சரி செய்யப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை! - மீண்டும் மின் உற்பத்தி | kudankulam atomic power plant has started power production again

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (11/02/2019)

கடைசி தொடர்பு:12:40 (11/02/2019)

3 நாளில் சரி செய்யப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணு உலை! - மீண்டும் மின் உற்பத்தி

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டதால், மீண்டும் மின்சார உற்பத்தியைத் தொடங்கியது. 

மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இரு உலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுடன், தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம் பவர் கிரீட் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

முதல் அணு உலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப அந்த உலையானது அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. தற்போது பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட முதல் அணு உலை, 100 நாள்களைக் கடந்த போதிலும் மீண்டும் இயக்கப்படவில்லை. 

கூடங்குளம் அணு உலை

இந்த நிலையில், இரண்டாவது அணு உலை கடந்த 8-ம் தேதி மின் உற்பத்தியை நிறுத்தியது. அணு உலையின் வால்வில் பழுது ஏற்பட்டதால் செயல்பாட்டை நிறுத்தி வைத்து இருப்பதாகத் தகவல் வெளியானது. பின்னர் உலையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் இந்திர மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டினர். அதனால் மூன்றே நாள்களில் குறைபாடு சரிசெய்யப்பட்டதால், இரண்டாவது அணு உலை இன்று அதிகாலை 2.37 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

அணு உலையின் செயல்பாட்டை கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் திறனை படிப்படியாக அதிகரித்து முழுக் கொள்ளளவான 1000 மெகாவாட் அளவை விரைவில் எட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.