விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் திருவிழா! | Vridhachalam Viruthakireswarer Koil Thiru Vizha News

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:13:00 (11/02/2019)

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் திருவிழா!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா 5 கம்பங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் மணிமுக்தாற்றின்  கரையில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இக்கோவில் ``காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி" என்று கூறப்படுகிறது. இக் கோயிலில் மாசி மகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோயிலில் பிராகாரம், கொடிமரம், தீர்த்தம், கோபுரம், நந்தி என அனைத்தும் ஐந்து, ஐந்தாக இருப்பது சிறப்பாகும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருத்தகிரீஸ்வரர்

இதை முன்னிட்டு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் மூலவர் எதிரில் உள்ள கொடிமரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.

விருத்தகிரீஸ்வரர் கோயில்

தொடர்ந்து பிரதோஷ நந்தி கொடிமரம் உட்பட 5 கொடிமரங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆறாம் நாள் திருவிழாவாக கோயிலைக் கட்டிய விபச்சித்து முனிவருக்குக் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் திரு விழாவாக வரும் 18-ம் தேதி முக்கிய திருவிழாவாகத் தேர் திருவிழா நடைபெறும். பத்தாம் நாள் திருவிழாவாக 19-ம் தேதி மாசி மக உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்து மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி நடைபெறும். பதினோராம் நாள் திருவிழாவாக 19-ம் தேதி இரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகனத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். தொடர்ந்து 12-ம் நாள் மாசி மகத் திருவிழா பூர்த்தியாக சண்டிகேஸ்வரர் திருவிழா நடைபெறும்.