மாணவி ஷோபியா தொடர்ந்த வழக்கில் தமிழிசைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! | Madurai Bench of Madras High Court send Notice against tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (11/02/2019)

மாணவி ஷோபியா தொடர்ந்த வழக்கில் தமிழிசைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மாணவி ஷோபியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி சோபியா

கடந்த சில மாதங்களுக்கு முன் பி.ஜே.பி விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அப்போது விமானத்தில் கனடாவில் பிஹெச்.டி ஆராய்ச்சி செய்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண்ணும் பயணித்து வந்தார். விமானத்தில் தமிழிசையைப் பார்த்து ஷோபியா, ``பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பியதாகச் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில், விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் ஷோபியா. இதனால், தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது.

பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளரிடம் தமிழிசை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஷோபியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், 505(1)(B), 290 மற்றும் 75 (M.C.P) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என ஷோபியா மனுத்தாக்கல் செய்தார்.

மதுரை உயர் நீதிமன்றம்

 

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி சேசசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷோபியா மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இது குறித்து புகார்தாரர் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டார்.