`இலங்கைக்கு அனுப்புகிறோம் வாங்க!’ - நம்பிச் சென்ற 5 பேர் சுங்கத்துறையினரிடம் சிக்கினர் | refugees who tried to go to Sri Lanka illegally: two arrested, including the agent

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (11/02/2019)

`இலங்கைக்கு அனுப்புகிறோம் வாங்க!’ - நம்பிச் சென்ற 5 பேர் சுங்கத்துறையினரிடம் சிக்கினர்

உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 5 பேர் சுங்கத்துறையினரிடம் சிக்கினர். இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த ஏஜென்ட் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற அகதிகள்
 

ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் நேற்று இரவு தனுஷ்கோடி பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது இரட்டைத் தாழை சவுக்குத் தோப்பு பகுதியில் பதிவு எண் இல்லாத ஆட்டோ ஒன்று நின்றுள்ளதைக் கண்டனர். இதையடுத்து சவுக்குத் தோப்புக்குள் சென்ற சுங்கத்துறையினர் அங்குள்ள கடற்கரை ஓரம் சிலர் அமர்ந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அகதிகள் இலங்கை செல்ல ஏற்பாடு செய்த ஏஜென்ட்

அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் படகு மூலம் இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தங்களிடம், ரூ.25,000 வாங்கியதாகவும் படகுக்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற மதுரை ஆனையூர் அகதிகள் முகாமில் வசித்து வரும் கணேசன், சோமாலை, குமுதினி, மலர் மற்றும் 10 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரையும் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர்.

இலங்கை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கு அழைத்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் ஆனந்த் மற்றும் அவருக்கு உதவியாக அகதிகளை ஆட்டோவில் இருந்து ஏற்றி வந்த உடைச்சியார் வலசைப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் ஆகிய இருவரையும் தனுஷ்கோடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.