‘திருந்தமாட்டான்... சிறையில் அடைங்க!’ - செம்மரம் கடத்திய மகனைச் சிக்கவைத்த தாய் | Get in jail! The mother who insult son

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (11/02/2019)

கடைசி தொடர்பு:20:35 (11/02/2019)

‘திருந்தமாட்டான்... சிறையில் அடைங்க!’ - செம்மரம் கடத்திய மகனைச் சிக்கவைத்த தாய்

காட்பாடி அருகே செம்மரக் கட்டைகளைக் கடத்தி வீட்டில் பதுக்கிவைத்திருந்த மகனை, போலீஸாரிடம் அவரின் தாயே சிக்கவைத்தார். ஆறரை டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செம்மரக்கட்டை

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் வழியாக இன்று காலை லாரியில் செம்மரக் கட்டைகளைக் கடத்திச் செல்வதாக, லத்தேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. போலீஸார், விரைந்து சென்று, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அவ்வழியாக வேவு பார்த்தபடி புல்லட்டில் ஒருவர் வந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, கரசமங்கலம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அமானுல்லா (29) என்பது தெரியவந்தது. அவருக்குப் பின்னால் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், செம்மரக் கட்டைகள் இருந்தன. லாரியில் இருந்த மூன்று நபர்கள் சிக்கினர். செம்மரக் கட்டைகளை அமானுல்லா தலைமையில் அந்தக் கும்பல் கடத்திச் சென்று விற்க முயன்றது தெரியவந்தது. 

செம்மரக்கட்டை

லாரியுடன் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அமானுல்லா உட்படப் பிடிபட்ட 4 பேரையும் விசாரணைக்காகப் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அமானுல்லா சிக்கியதையறிந்த அவரின் தாயார், ‘‘வீட்டிலும் செம்மரக் கட்டைகளைத் தன் மகன் பதுக்கி வைத்திருக்கிறான்’’ என்று போலீஸாரிடம் தெரிவித்தார். போலீஸார், அமானுல்லாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. லாரி மற்றும் வீட்டில் சுமார் ஆறரை டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செம்மரக்கட்டை கடத்திய லாரி

பிடிபட்டவர்களின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பது பற்றி காட்பாடி டி.எஸ்.பி லோகநாதன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அமானுல்லாவின் தாயார் கூறுகையில், ‘‘5 ஆண்டுகளுக்கு முன்பு, இவன் செம்மரக் கடத்தலில் சிக்கினான். அப்போது, அமானுல்லாவை வெளியில் கொண்டு வருவதற்காக வீட்டை அடகு வைத்து ரூ.3 லட்சம் செலவழித்தேன். அதற்கான வட்டியோடு சேர்த்து, இப்போது ரூ.15 லட்சம் கடன் சுமை இருக்கிறது. கடனை அடைக்காததால், வீட்டை ஏலம் விடப்போவதாகக் கடன் கொடுத்தவர்கள் தெரிவித்தனர். வீட்டை மீட்க ஒரு மாதம் டைம் வாங்கிய அமானுல்லா, மீண்டும் செம்மரக் கட்டைகளைக் கடத்தும் தொழிலில் இறங்கிவிட்டான். சிறையில் அடையுங்கள். என் மகன் திருந்திவந்தால் போதும்’’ என்றார்.