`திருமணத்துக்கு மறுத்த காதலன்!’ - போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த இளம்பெண் | Lover who refused marriage-The nomads teenager who poisoned the police station

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:07:22 (12/02/2019)

`திருமணத்துக்கு மறுத்த காதலன்!’ - போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த இளம்பெண்

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த நாடோடி இளைஞனுடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நாடோடி இன இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலன் பூவரசன்

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (24). நாடோடி இனத்தைச் சேர்ந்த இவரின் அண்ணனுக்கும், வாலாஜாபேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த கோவை சரளா (18) என்பவரின் அக்காளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அக்காவைப் பார்ப்பதற்காக, கோவை சரளா அடிக்கடி பூவரசன் வீட்டுக்குச் சென்றார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் காதலித்தனர். இந்த நிலையில், கோவை சரளாவை திருமணம் செய்ய பூவரசன் மறுத்துவிட்டார். தன்னுடைய அத்தை மகளைத் திருமணம் செய்யப் பெற்றோர் மூலம் ஏற்பாடுகளைச் செய்துவந்துள்ளார். இதையறிந்த கோவை சரளா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி காதலனிடம் மன்றாடியுள்ளார். பூவரசன் ஒப்புக் கொள்ளவில்லை.

விஷம் குடித்த இளம்பெண்

இதனால் மனமுடைந்த கோவை சரளா, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு 11-ம் தேதி வந்து, காதலன் பூவரசன் மீது புகார் அளித்தார். போலீஸார், பூவரசனை வரவழைத்து விசாரித்தனர். அவர், ‘‘என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. கோவை சரளாவை நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதைக்கேட்ட கோவை சரளா மறைத்துவைத்திருந்த விஷ மருந்தைக் குடித்து, காவல் நிலைய வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்றார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பெண் மீட்கப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாடோடி மக்கள்

இதனிடையே, அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், ‘‘போக்ஸோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறி காதலன் பூவரசனிடம், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.